உலகம் வேகமாகச் சுற்றுகின்றது!
காலம் கடக்கின்றது.
நேரம் நகர்கின்றது.
உலகம் முன்னேறுகின்றது!
விஞ்ஞானம் வளர்ச்சி – உலகத்தை தாண்டி, விண்மண்டலத்தை தாண்டி
அதற்கு அப்பாலும் செல்லுகிறது.
ஏன்! விஞ்ஞானம் அணுவைத்துளைத்து அதில் உள்ள
கூறுகளையும் துளைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது!
கலத்தை ஆராய்ந்து, கருவை ஆராய்ந்து,
அதில் உள்ள பரம்பரை அலகினை ஆராய்கின்றது!
இன்னும் ஏதேதோ எல்லாம் செய்கின்றது..............!

இங்கு – நாங்கள் சிலர் மட்டும்
ஏதும் செய்யாதவர்களாக இருக்கின்றோம்!
முன்னையது – உலகின் பலம்!
பின்னையது பலவீனம்!
உலகின் ஆதாரம் – இளைஞர்கள்!
நாங்களும் இளைஞர்கள்தாம்!
சொல்லித்தான் அதுகூட சிலபேருக்கு ஞாபகம் வருகின்றது.
செயற்பட வேண்டியவர்களும் சாதிக்க வேண்டியவர்களும்
நாங்கள் தான்!
ஆனால் இப்போது நாங்கள் – நாங்களாக இல்லையே!

எங்களில் சிலர் தொலைக்காட்சிகளிலும் வீடியோக்களிலும் மூழ்கி இருக்கின்றனர். தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பப்படும் சில நிகழ்ச்சிகள் உணர்ச்சி பூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும் இருங்கின்றது என்பது உண்மையே. ஆனால் சாதிக்கப் பிறந்த இன்றைய இளைஞர்கள் வெறுமனே பொழுது போக்கு அம்சமான வீடியோப் படங்களில் இரவு பகலாக மூழ்கி இருப்பது கவலைக்குரியதொரு விடயம்.

இன்னும் சிலர் – நித்திரையெனும் செயற்கைக் கல்லறையினுள் தங்களைப் புதைத்துக் கொண்டிருக்கின்றார்கள்!

இன்னும் சிலர் – எங்கோ தங்களைப் பார்த்து சிரித்த அழகான பெண்களை நினைத்து உருகி அவர்களுக்கு பின்னால் திரிந்து அவர்களது நேர அட்டவணை எல்லாம் தங்கள் நேர அட்டவணைகளாக்கி நேரத்தை வீண்டிக்கிறார்கள்! காதலை நான் எதிர்க்கவில்லை!
அதற்காக இப்படியா...............!

இன்னும் சிலர் காதலிக்காமலேயே, காதல் தோல்விகளுக்கு உட்பட்டவர்களாக – சிகரெட், போதைப் பொருள், மது என்று சில ஆட்கொல்லிகளுக்கு அடிமைப்பட்டவர்களாக தங்கள் வாழ்க்கையை அழிக்கின்றனர்!

சாதனை புரியவேண்டியவர்கள் இப்படியே –
செத்துக் கொண்டிருக்கின்றேம்!
இளம் வயதில் சாதிப்பது – மிகச்சுலபம்!
வயது போனபின் அனுபவமே எஞ்சும்!
முன்னோர்களின் அனுபவங்களை அறிந்து நாம் முன்னேறுவோம்!

சில பேர் முணுமுணுக்கிறார்கள்........
”தெரிந்த விடயம் தானே ஏன் அலசுகிறீர்கள்?”
தெரிந்த விடயம் தான்!
ஆனால் –
நீ தெரிந்து கொண்டால் மட்டும் போதாது நண்பனே!
ஏதாவது செய்................
உன்னிடம் திறமை இருக்கின்றது!
சாதனை புரி!
உனக்கு உதவ – நாம் இருக்கின்றோம்.
இன்னும் பலர் இருக்கின்றார்கள்!
நாங்கள் சாதிப்போம்.
உலகோடு நாங்களும் முன்னேறுவோம்!

அனைவருக்கும் இனிய 2012 புதுவருட வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் இந்தவருடம் இனிய வருடமாக அமைய ஆண்டவனை பிரார்த்திகிறேன்.

வளமை போலே இந்த வருடமும் எனது ஆயிரம் கனவுகளுடன் விடிகிறது. அவற்றில் ஒன்று எனது பதிவுகளை அடிக்கடி இடவேண்டுமென்பதும் தூங்கியிருக்கும் இவ்வலையை புதுப்பிக்க வேண்டும் என்பதாகும்.


இந்தவருடம் நான் ஆரம்பிக்கவிருக்கும் பல புது வாழ்வியல் மாற்றங்களுடன் இதற்கும் நேரம் இருக்கும் என்று நம்புகிறேன். பல புதிய எண்ணங்களுடன் அடிக்கடி வருவேன்.


நன்றியும் வணக்கங்களும்