”கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பர் முன்னோர்கள். நான் புலம்பெயர்ந்து வந்து நிறைய அலைந்த பின் நிரந்தரமாக குடியேறிய இடத்தில் இருந்து 5 மைல் (என்ன தமிழ்?) தொலைவிற்குள் 5 கோவில்கள் உள்ளது பெரிய விடையம் தான்.

தமிழர் சென்ற இடமெல்லாம் அவர்களுடன் சென்று குடியேறி
அருள் பாலிக்கும் தெய்வங்களுள் முதன்மையானவர் முருகக் கடவுள்.
அந்தவகையில் லண்டன் ஈஸ்ட்காம் பகுதியில் மிகவும் அருமையான
ஒரு முருகப்பெருமான் ஆலயம் அமைந்துள்ளது.
1970 களின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இக்கோவில் 2005ம்
ஆண்டு ராஜகோபுரமும் கருங்கல் கட்டிடத்துடனும் கூடிய வளற்சி கண்டது.
இந்த ஈஸ்ட்காம் முருகன் கோவில் வருடாந்த மகோற்சவம் கடந்த இருவாரங்களாக நடைபெற்று வரு
கின்றது. ஊரில் இருந்து வெளியேறிய பின் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு
பிறகு தேர்த்திருவிழாவிற்கும் சப்பரத்திருவிழாவிற்
கும் போயிருந்தேன். அங்கு கிளிக்கிய படங்களை
காண்க..
சப்பரத்திருவிழாதேர்த்திருவிழா


ஓமகுண்டத்தில் தீ வளர்த்து
மணமுடித்து கொடுக்கிறார் - பெண்ணை
வாழ்க்கை முழுக்க தொடர்கிறது
அதே தீ ......அடுப்பில் !
சுட்டும் விளி அழகை
அதிகாலை சூரிய உதயத்தை
பால்வீதியின் வடிவத்தை
ஓளித்து வைக்கும் அழகே!

அழகான வண்ணத் தோகை மயிலின்
முழு உருவத்தையும்
உன்னுள்ளே புதைத்து வைத்திருக்கும்
தாற்பரியத்தை எங்கே கற்றாய்?

எனனைப் பார்த்து புன்னகைத்தது போதும்
உயிர் கொண்டு ஏழுந்து வா....!


(படம் : மருமகன் புருக்ஷோத்)

காகிதமும் நானும்
உணர்ச்சிகளை பகிர்ந்தோம்
வெகு நேரமாய்...!
படர இடம் தேடியது
முல்லைச் செடி - அதனை
வாள் கொண்டு வெட்டி
மாட்டுக்கு உணவாக்கினர்

குளிரில் நடுங்கியது
தேகைமயில் - அதன்
இறகுகளை பிடுங்கி
சந்தைக்கு அனுப்பினர்.

ஆராட்சி மணி தேடியது
அறிவுள்ள மாடு - அதை
கொடுமையாக கொன்று
உணவாகிப் புசித்தனர்.

சிலம்போடு வந்தாள்
கண்ணகி - அவளை
அலங்கோலப் படுத்தி
சிறையினில் அடைத்தனர்.

ஆனால்
சகுனிக்கு அமைதிப் பரிசு!
கூனிக்கு ஓஸ்கார் விருது!
கொண்ட கொள்கை காப்பாற்ற
காடு சென்றான் ராமன்
கொண்டவனுக்கு சேவை சேய்ய
கூடவே சென்றாள் அவன் துணைவி

அண்ணனுக்கும் அவன் துணைவிக்கும்
பாசமாக பணிவிடை புரியவென
பலகாலம் வனத்தில் வாழ்ந்தான்
பலத்திற்கு இலக்கணமான இலக்குமணன்

ஈரேழு வருடங்கள் ஊரிலேயே தங்கி
மாமிமாருக்கு சேவகம் செய்து
தன்நிலை கெடாமல் தனியே வாழ்ந்தாள்
இலக்குவன் துணைவி ஊர்மிளா.

கட்டிய கணவனை மனத்திலே வரிந்து
விட்டுக்கொடுபிற்கு இலகணமாய் இருந்து
இளமையான வயதினிலே வாழாது நொந்து
தியாகத்திற்கு உதாரணமாக தன்னையே தந்து

சரித்திரமானாள் ஊர்மிளா.
ஒன்று இரண்டல்ல வருடங்கள் பதினாலு
இன்று யாரும் செய்வார்களா இது போலே?
பாவம் ஊர்மிளா....!
சில மழலைகளே
தமிழ் கதைக்க - அதை
மறந்தவர் பலர் இருக்க
தாய்மொழி கொஞ்சமாய்-
பிறமொழி கொஞ்சமாய்

எங்கள் தேச கலாச்சாரத்துடன்
நடப்பவர் சிலர்-
அன்னிய கலாச்சாரம் சிறந்தது
என்பவர் சிலர்
இரண்டுக்கும் இடையில்
இரண்டும் புரியாமல்
திகைப்பவர் பலர்

ஏங்கள்சிறிசுகளின் எதிர்காலம்
கேள்விக்குறி தான்.
வயது வந்தவர்களேகுளம்பிப்போயிருக்க
காதிலே தோடும் சிறிய குடுமியுமாய்
டிஸ்காவில் ஆட
நேற்றுப் பிறந்ததுகள்பாவம்
என்ன செய்யும்?

தந்தை வேலைக்கு
தாய் சீரியல் பார்க்க
சேர்ந்து விளையாட
ஆள் இல்லை
புரியாமல் திகைக்கும்
மழலைகள் எத்தனை?

Power ranger உம்
spider man உம்
மட்டுமே பார்த்துப் பார்த்து
monster ஆகிவிடும்
குஞ்சுகள் எததனை?

எங்களுக்கும் நேரமில்லை
வேலையும் சாப்பாடும்
மிஞ்சுகின்ற நேரம்
மூன்று மணி நேர தமிழ்ப் படம்

ஒரு நாள் நேரம் வரும்
பிள்ளைகளுக்கு தமிழ் படிப்பிற்க
நிலாச்சோறு பாசத்துடன் ஊட்ட
கலாச்சாரம் எதுவென்று உணர்த்த
எல்லாவற்றிகும் காலம் வரும்

(புகுந்த மண் என்கின்ற தலைப்பில் லண்டன் sanrise வானொலிக்காய் 1997 பங்குனி எழுதியது)
எனது நண்பர் ஒருவர் வெளிநாட்டில் இருந்தபடியே தபால் மூலம் தமிழ் முனைவர்படிப்பு படிக்க பெரும் ஆவலாக இருக்கிறார். இவர் தமிழ் நாடு சென்றுவரமுடியும். ஆனால் நிரந்தரமாக தங்க முடியாதுள்ளது. தமிழ் முனைவர் கல்வியை ஏதாவதுதமிழ் நாட்டு பல்கலைக்கழகங்கள் தபால் மூலம் வளங்குகின்றனவா? இது சாத்தியமா? யாருக்கும் ஏதாவது விபரம் தெரிந்தால் பினூட்டமிடவும். முற்கூட்டிய நன்றிகள்
இலங்கையில் இருந்து உற்பதியாகி தமிழ் வாடிக்ககையாளர்களுககாக புலம் பெயர் நாடுகளுக்கு அனுப்பப்படும் ஏற்றுமதிப் பொருட்களை புறக்கணிக்கும் படி அண்மையில் பல பேர் வெவ்வேறு வளிகளிலும் வேண்டியும் அறிக்கை விட்டும் இருந்தனர், ஆனால் நுகர்வேரோ வியாபாரத்ஸ்தலங்களோ கண்டுகொண்டதாய் தெரியவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் எனக்குத் தெரிந்த தமிழ் கடை ஒன்றில் இலங்கைப் பழச்சாறு, உலர் உணவுகள், கடல் உணவுகள் குவிக்கப் பட்டு இருந்ததைப் பார்த்து விட்டு கடை முகாமையாளரிடமே இது பற்றிக் கேட்டேன். “சில சாமான் விக்காட்டி அண்ணன் கடையையே இழுத்து மூட வேண்டியது தான். சனம் வேற கடை பார்த்து விடும்” என்ற பதில் வந்தது. அதே நேரம் அங்கு வந்த ஒரு அக்கா நெக்டோவை ( இலங்கை யானை மார்க் குளிர் பானம்) காணாததால் கவலையுற்று நெக்டோ முடிந்துவிட்டதா? Stock இல் இல்லையா என்றும் தனது (லண்டனில் பிறந்து வளர்ந்த) மகன் வேறு ஏதும் குடிக்கமாட்டார் என்றும் கலாய்த்துக் கொண்டிருந்தா.

இன்னும் ஒரு கடை முதலாளி என்னடா என்றால் “அவங்களுக்கு ( இலங்கை) உதவி வளங்கும் நாடுகள் மில்லியன் பில்லியன் என்று கொட்டிக் கொடுக்குது. அதுகளுக்கு முன்னால் ஏற்றுமதிப் பொருட்களால் போகும் அன்னிய செலவாணி ஒன்றும் பெரியதிலை” என்று ரெக்னிக்கலாய் பதில் கூறினார். அவருக்கு சிறுதுளி பெருவெள்ளம் என்று தெரிவித்து விட்டு வந்தேன். இவரது கடையிலும் தகரத்தில் அடைத்த மீன் மற்றும் TVP சோயா வகைகள் நிறைய அடுக்கப்பட்டிருந்தன.
எனது நண்பர் ஒருவரும் இலங்கை சாமான்களை புறக்கணிப்போம் என்று சொல்லி விட்டு அவற்றிக்கு மாற்றீடாக இந்தியாவில் இருந்து வரும் பொருட்களை தானே பாவிக்க வேண்டி வரும் என்றும் இந்தியா எங்களுடைய பிரச்சினையை கையாண்ட விதம் பிழை என்றும் வாதாடினார்.

இவற்றிக்கு எனக்கு பதில் தெரியவில்லை. ஆனால் எனக்கு ஒன்று மட்டும் தெரியும். இலங்கைப் பொருட்களையும் – அவை நேரடி இறக்குமதியோ அல்லது வெளிநாடுகளில் பைகளில் அடைக்கப்பட்டவையோ – சேவைகளையும் ( முக்கியமாக விமானப் போக்குவரத்து) முற்று முழுதாக அனைத்து புலம்பெயர் தமிழ்ர்களும் அவர்களை சார்ந்தவர்களும் புறக்கணிக்கும் பச்சத்தில் உடனடியாக இலாவிட்டாலும் இன்னும் 5 -10 வருடங்களில் இலங்கைக்கு கிடைக்கும் அன்னிய செலவாணியின் அளவில் பெரிய மாற்றம் வரும், தமிழர்களை அளித்து வெடி கொளுத்தி கொண்டாடியவர்கள் அத்ற்காக வருந்த வேண்டிய காலம் நேரும் எனபது திண்ணம்.

இனி வரும் பதிவுகளில் எவ்வளவு அனனிய செலவாணியை இலங்கை பெறுகிறது எனபது பற்றியும் மாற்றீட்டு போருட்கள் மற்றும் என்ன மாதிரி நண்பர்களுக்கு விழிப்பு உணர்வு ஊட்டுவது பற்றியும் பார்ப்போம்.
நாட்டுக்கு நன்மை புரிபவர், நல்லதம்பிப் பெரியாரிவர், கூட்டுக்குடும்பங்கள்....என்று தாளலயத்தோடு பொன்னுத்துரை அவர்கள் ஆடி நாடகம்பழக்கும் போது அந்தக் கற்பனை பெரியாராகவே ஆகிவிடுவோம் நாங்கள். வேட்டியை மடித்துக்கட்டி வெறும் கையை குடை போல் பிடித்து காலை அகலவைத்து நடந்து அவர் காட்டுகையில் நடிகர் சிவாஜி எல்லாம் எந்தமட்டு?

வானொலி நாடகங்களை கேட்டுவிட்டு முத்தமிழில் மூன்றாவதாக ஏன்நாடகங்களை சேத்தார்கள் என்று வியந்து கொண்டு இருந்தபோது எங்களூர் (குரும்பசிட்டி) சன்மார்க்கசபையில் (சனசமூக நிலையம்) தாளலய நாடகங்களை கொண்டுவந்து அரங்கேற்றி நாடகம் என்றாலே புதுவிளக்கம் கொடுத்தவர் ரி பொன்னுத்துரை அவர்கள்.

இவர் நடித்த பொறுத்தது போதும் நாடகம் (திரு தாஸீஸியஸ் இயக்கியது?) விடியவிடிய பார்த்துவிட்டுவந்திட்டு வந்திட்டு போறியோ மச்சான்என்று முணுமுணுத்தது 25 வருடங்களுககு முன் என்றாலும் இப்போ நடந்தது போல் கண்ணுககுள் நிற்கிறது. அப்போது நாங்கள் சிறுவர்கள் ஆதலால் கடற்கரைப்பக்கம் அதிகம் விடமாட்டார்கள். இந்த நாடகத்தின் மூலமே மீன்பிடித் தொழிலின் முறை தலைகளை அறிந்து கொண்டேன். அதன் பிறகு சிறிது காலத்தால்பொன்னுத்துரை அவர்கள் நடித்த இன்னுமொரு நாடகம் (திரு சங்காரம்?) வாயிலாக மனித மனங்களை போட்டு ஆட்டும் பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை ஆகியவை பற்றிய அறிவும் கிடைத்தது.

இந்த நாடகங்களின் தாக்கத்தாலேயே நாடகம் பழகவேண்டும் என்ற ஆவல்ஏற்பட நானும் இன்னும் சில தோழர்களும் சன்மார்க்கசபையின் பின்புறத்தேஇருந்த கட்டிடத்தில் பொன்னுத்துரை அவர்களிடம் நாடகம் பழகினோம். நாட்டுபிரச்சனைகள் காரணமாக இடையில் நின்று விட்டது. ஆனாலும் பிற்குவாழ்க்கையில் நடிக்க அது உதவிற்று.

நீங்கள் தாளலய நாடகங்கள் பாத்திருக்கிறீர்களா? நாடகத் தமிழின் சுவையைஉணர்ந்திருக்கிறீர்களா? எங்களூர் பொன்னுத்துரையை தெரியுமா?

பின் இணைப்பு: தற்சமயமாக google இல் தேடும் போது இன்னுமொரு பொன்னுத்துரை ப்ற்றிய பதிவு தினக்குரலில் கிடைத்தது. அதுவும் சரியாக ஒரு வருடத்தின் முன் பதியப் பட்டிருந்தது. அதை அப்படியே பிரதி செய்திருக்கிறேன்.....

நாடகத்துறையில் பல சாதனைகளை நிலைநாட்டிய கலைப்பேரரசை நினைவு கூர்வது காலத்தின் தேவையாகும் - செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன்

"கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை சிறுவயது முதல் நாடகத்துறையில் அதிக ஈடுபாடுகொண்டு பல சாதனைகளை நிலைநாட்டியவர். அவரால் எழுதப்பட்ட பல நாடகங்கள் அவரது ஆற்றலை மக்களுக்கு எடுத்தியம்பின, நாடகங்களில் சிரிப்பும் சிந்தனையும் இருந்தால்தான் அதனை மக்கள் இரசிப்பார்கள் எனக் கூறும் கலைப் பேரரசால் மேடையேற்றப்பட்ட நாடகங்களில் அவரே முக்கிய பாத்திரங்களில் நடித்து தனது நடிப்பாற்றலை வெளிக்காட்டினார். அவரது நடிப்பால் தாளக்கட்டும், ஓசைநயமும் உச்சரிப்புத் தெளிவும் இருக்கும். எப்போதும் நடிப்பு குரலிலும் தெரிய வேண்டும் என கூறுபவரும் அவரேதான்'

இவ்வாறு, கலைப் பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை நினைவு விருது வழங்கும் வைபவத்தில், சிறப்புரையாற்றிய தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்கா தேவஸ்தான தலைவரும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக்கல்லூரி அதிபருமான செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் தெரிவித்தார்.

இவ்விருது வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதின மண்டபத்தில் யாழ்.இலக்கிய வட்டத்தலைவர் கலாநிதி கே.குணராசா தலைமையில் நடைபெற்றது. வைபவத்தில், இவ்வாண்டுக்கான கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை விருது, சிறந்த வில்லுப்பாட்டுக் கலைஞர் கலாபூசணம் சின்னமணி க.நா.கணபதிப்பிள்ளைக்கு வழங்கப்பட்டது. விருதினை பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை வழங்கிக் கௌரவித்தார்.

ஆறு. திருமுருகன் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

கலைப்பேரரசு தமிழ்நாடு கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ராகி மைடியர் நாடகத்தை மேடையேற்றி நடித்துப் பாராட்டப்பட்டவர். அவர் இந்தியாவில் படித்த காலத்தில் குவேனி, முதலாளி, தொழிலாளி போன்ற நாடகங்களும் அவரால் மேடையேற்றப்பட்டன. சிறுவயதில் அவரது நாடக ஈடுபாடு பின்னைய காலங்களில் அவரை ஒரு நல்ல கலைஞனாக அடையாளப்படுத்தின. ஈழத்தின் நாடகக் கலைஞர் கே.கே.வி.செல்லையாவுடன் இணைந்து மேடையேற்றி நாட்டாமை நாகம்மா, அல்லி அர்ச்சுனா போன்ற நாடகங்களும் வசாவிளான் மகாவித்தியாலயத்தில் மேடையேற்றப்பட்ட பக்த துருவன், உலோபியின் காதல், விதியின் சதி ஆகிய நாடகங்களும் மேடையேற்றப்பட்ட போது கலைப் பேரரசின் நடிப்பாற்றலை எல்லோரும் அறிந்து கொண்டனர்.

அவரை ஒரு சிறந்த நடிகராக வெளியுலகுக்கு அறிமுகம் செய்த நாடகம் தாளக் காவடி பக்திக் கூத்தாகும், இதனை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முதன் முதலில் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பியது. கந்தபுராண கலாசாரத்தின் தனித்துவ சின்னமாக நேர்த்திக்கடன் முழுபக்திக்கூத்தாக அன்றைய காலகட்டத்தில் பிரபல்யமாக இருந்தது. இந்நாடகம் பின்னர் மாவட்டபுரம் கந்தசாமி கோவில் உற்சவகாலத்திலும் வெளியிடங்களிலும் மேடையேற்றப்பட்டு சிறந்த கலைஞராக அவர் பரிணாமம் அடைந்தார். அவரது 25 வருட கலையுலக வாழ்வைப் பாராட்டி குரும்பசிட்டி சன்மார்க்க சபை ஏற்பாடு செய்த விழாவிலே கலைப்பேரரசு பொன்னுத்துரை பெரிதும் நேசிக்கும் கலையரசு சொர்ணலிங்கத்தால் கலைப்பேரரசு பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இத்தனை பெருமைக்குரியவரான கலைப் பேரரசை நாம் நினைவு கூருகின்றோமானால் அதுகாலத்தின் தேவையாகவுள்ளது, அவரது மறைவு காலத்தின் நியதியாக கருதினாலும், அவரை நினைவு கூர்ந்து வருடாவருடம் வாழும் கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது நாம் கலைத்தாய்க்குச் செய்யும் பெரும் பேறாகும். பண்பாட்டு விழுமியங்களை பேணும் கலைஞர்களை நாம் கௌரவிப்பது எமது சமுதாயக் கடமையாகுமென்றார்.

தலைமையுரையாற்றிய கலாநிதி கே.குணராசா தமது உரையில்,

கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை, நாடகத்துறையில் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தாரோ அந்தளவிற்கு ஈழத்து இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு கொண்டிந்தார். அவர் மாத்தளையில் புனித தோமையார் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் மாத்தளை இலக்கிய வட்டம் என்ற அமைப்பை உருவாக்கி ஈழத்து இலக்கியப் பரப்பில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். பின் யாழ்ப்பாணத்தில் ஆசிரியராக பணியாற்றும் போதே யாழ். இலக்கிய வட்டத்தை, கனக செந்திநாதன், ஈழவாணன் போன்ற ஈழத்து தமிழ் இலக்கியகர்த்தாக்களை இணைத்து உருவாக்கினார். அவரது பெருமுயற்சி இன்று யாழ்.இலக்கிய வட்டத்தை பெருவிருட்சமாக உருவாக்கியுள்ளது. அவரது நாடக வாண்மை சகலராலும் போற்றப்பட்டது, அவர் முத்தமிழுக்கும் பெரும் பணியாற்றியுள்ளார் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை. அத்தகையவரை நினைவுகூர்ந்து வருடா வருடம் நம்வாழும் கலைஞர்களை கௌரவிப்பது பெரும் சிறப்பாகும் என்றார்.

வாழ்நாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை உரையாற்றுகையில்; ஏ.ரி.பொன்னுத்துரை இயல்பாகவே எல்லோருடனும் இனிமையாகப் பழகுவர். அவர் பேசும் போது எப்போதும் நாடகத்துறையில் புதிய யுக்திகளை பழைமை மாறாது புகுத்த வேண்டுமெனவே பேசுவார், பேசும் போதே ஒரு நல்ல கலைஞனாக மாறிவிடுவார். அவர் நடித்த நாடகங்கள் மக்கள் மனதை கவர்ந்தமைக்கு அவரது நடிப்புத்தான் காரணம், நாடக உலகில் அவர் பதித்த தனித்துவ முத்திரையை எவரும் அழித்துவிட முடியாது. அவர் எப்போதும் நிறுவன ரீதியாகவே தன் ஆற்றலை வெளிப்படுத்துபவர். அவரால் மேடையேற்றப்பட்ட விதியின் சதி நாடகத்தில் முதன் முதலில் பெண்பாத்திரத்தை பெண் தான் நடிக்க வேண்டுமென புரட்சி செய்து செயல்படுத்திய பெருமைக்குரியவர்.

தமிழர் பண்பாட்டியலில், நாடகம் முக்கிய பங்கு வகிக்கின்றது.அந்த வகையில் கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரையும் நாடகக்கலை மேம்பாட்டுக்கு தன்னை அர்ப்பணித்த கலைஞனாக வரலாற்றில் இடம்கொண்டுள்ளார். இன்றைய நிகழ்வு அவரை நினைவு கூரவும் அவரது நினைவாக வாழும் கலைஞர்களை வாழ்த்தவும் கௌரவிக்கவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த கௌரவிக்கும் மாண்பு தமிழர்களுடைய பண்பாடாகும். கலைஞர்கள் எம்மை மகிழ்விப்பவர்கள் எமது பண்பாட்டை மேம்படுத்துபவர்கள். புதிய கலை வடிவங்களை உருவாக்குபவர்கள் அவர்களை வாழ்த்துவதும் பாராட்டுவதும் எங்கள் கடமையாகும் என்றார்.

பூ உலகத்தில்
ஒரே ஒரு பட்டாம்பூச்சி...
அது நீ தான்
என் காதலி!

**

சூரியன் ஒளி தந்தான்
நிலவு குளிர் தந்தது
மல்லிகை வாசம் தந்தது
காதலி நீ தான்
உன்னையே தந்தாய்!

**

இருள் வெளிச்சத்தை உணர்த்தியது
கூதல் வெம்மையை உணர்த்தியது
பொய் உண்மையை உணர்த்தியது
காதலி நீ தான்
என்னை உணத்தினாய்!

**

அணுக்குண்டோ
உன் விளித்திரைகள்?
என்னை மட்டுமல்ல
பலபேரை
உயிர்விட வைக்கின்றனவே!

**

பார்த்தாய் பார்த்தேன்
சிரித்தாய் சிரித்தேன்
தலையை திருப்பினாய்
உயிரிழந்தேன்!


(படங்கள் இணையத்தில் சுட்டவைதான்)
கவிஞர் மு.மேத்தாவை எனக்குப் பிடிக்கும். அவரின் எழுத்துக்கள் ஆணித்தரமானவை. இவரது ஒவ்வொரு கவிதையும் பிரசவங்கள். மனதை வருடும் புகைப்படங்கள். புதுக்கவிதகள் எழுத நான் முயற்சி செய்யும் போது எங்கே வசனத்தை முடிப்பது, சரியான குறியீடுகள் எப்படி பாவிப்பது போன்ற விடையங்களை பழக ஆதாரமாக இருந்தது இவர் கவிதைகள்.

மேத்தாவின் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த இந்தக்கவிதையை முழுவதுமாய் இங்கு தருகிறேன். சூரியனைத் துப்பாக்கி துளைப்பதிலை.... என்ற இக்கவிதை 1988 ஆம் ஆண்டு எழுதப் பட்டது. நான் முதல் முதலாய் வாசித்தது 1990ல். அன்று முதல் என் மனதில் நீங்காமல் இடம் பெற்ற இக்கவிதையை நான் இப்போது பார்த்து எழுதியது ”அவளுக்கு ஒரு கடிதம்” என்ற நூலில் இருந்து.

21 வருடங்களின் பின்னரும் இக்கவிதை சரித்திரமாய் இருக்கிறது,


உனக்காக
இதோ ...இதோ ஒரு எழுச்சிப் பயணம்!
சென்னையிலிருந்து கன்னியா குமரி!
செல்கிறோம் எங்கள் இதயங்கள் குமுறி!

நீ
எங்கிருக்கிறாய் என்பது
எங்களுக்குத் தெரியாது
ஆனால்-
என்ன செய்து கொண்டிருக்கிறாய்
என்பதை
உலகம் முழுவதும் உணர்ந்திருக்கிறது!

அவர்கள்-
எங்கே இருக்கிறார்கள் என்பது தெரிகிறது
ஆனால்-
என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்
என்பதைத்தான்
அவர்களும் கூட அறிந்து கொள்ளவில்லை!

நீ
தேசத்தை பிரசவிப்பதற்காக
அன்றாடம் உன்னையே
ஆயுத சிகிச்சைக்கு
ஆளாக்கிக் கொள்கிறாய்!

அவர்களோ-
ஒரு குழந்தையை கொல்வதற்காகத்
தாயின் வயிற்றையே
பீரங்கி கொண்டு பிளக்கப் பார்க்கிறார்கள்!

நீ-
விடுதலையை தேடுகிறாய்;
உன் மக்களுக்கான
விடியலைத் தேடுகிறாய்!
அவர்கள்
உன்னையே தேடுகிறார்கள்!

துப்பாக்கி முனைகளுகுச்
சொல்லி வைக்கிறோம்-
சூரியக் கதிர்களை துளைக்க முடியாது!

எமதர்மக் கைகளை எச்சரிக்கிறோம்-
வெண்ணிலவை வலை வீசி
வீழ்த்தியவர் கிடையாது!

ஒருவனைப் பிடிக்க ஒரு லட்சம் படையா?
உண்ண மறுத்தால் அதற்கும் தடையா?
உலக சரித்திரம் படித்ததே இல்லையா?

இனிமேல்-
காந்தி சிலைகளில் உள்ள கைத்தடியை அகற்றுங்கள்!
அதற்கு பதிலாகத்
துப்பாக்கி ஒன்றை அதன் தோள்மீது மாட்டுங்கள்!

இந்த ஆண்டு
அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவுக்குத்தான்!
ஆமாம்...
அமைதி என்பதற்கான
புதிய அர்த்ததைப் பூமிக்கு தந்ததனால்!

அன்றொரு நாள்-
பிரபாகரன் எனபது பெயராக இருந்தது.
இப்போது-
பிரபாகரன் என்பது பிரமிப்பாய் ஆனது!
இனிமேல்
பிரபாகரன் எனபது பிரளயமாய் ஆகாதோ?

எங்கள்
இலட்சியக் கனவுகளின் சுமைதாங்கியே!
பொன்னாடை தோள்மீது போர்த்துவதாய்ச் சொல்லி
உன்மீது சிலுவை அறைந்தது யார்?

நீ ஏசுவல்ல-
ஆனால்
இறப்பினும் நீ உயிர்த்தெழுவாய்!
ஒரு பிரபாகரனாய் அல்ல...
ஒரு லட்சம் பிரபாகரனாய்!

உன்னுடைய
மூச்சுக் காற்று முகாமிட்ட இடமெல்லாம்
பட்டாளம் தனைச்சாய்க்கும் பாசறைகள் உண்டாகும்!

உன்னுடைய
பாதங்கள் நடந்த பாதைகளிலெல்லாம்
புல்லும் கூட புலியாக மாறும்!

உன்னுடைய
சுட்டும் விழிச்சுடர் தொட்ட இடமெல்லாம்
ஜோதி கருவாகும்!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
அங்கே உருவாகும்!


(இக் கவிதை யாழ்க்குடா நாடு சிங்கள வெறியர்களால் கைப்பற்றப்பட்டு அடுத்தநாள் தமிழ் வானொலிக்காய் எழுதப்பட்டது.)

விடுதலையாம்!
எம் மண்ணுக்கு-
செய்திகள் உளறின நேற்று

எங்கள் மண்ணுக்கு மட்டுமல்ல
எங்கள் கலாச்சாரத்திற்கும்
காலம்காலமாய் போற்றிய புனிதத்திற்கும்
எங்கள் மாவீரர் கனவுகளுக்கும்
எங்கள் மக்களின் உயிர்களுக்கும்
எங்கள் பெண்களின் கற்புகளுக்கும்

விடுதலையாம்-
மீட்டுவிட்டார்களாம் -
உளறின செய்திகள் நேற்று

நாய்கள் குரைத்தன
நரிகள் ஊளையிட்டன
வல்லூறுகளும்
ஆந்தைகளும்
சென்று குடியேற -
தயாராய் இப்போ இருக்கிறது
மீட்டெடுத்த மண்

விடுதலையாம்!
எம் மண்ணுக்கு-
செய்திகள் உளறின நேற்று
நான்....
கனகாலமாகத் தேடுகிறேன்
கிடைக்கவில்லை
நீங்களும்

கொஞ்சம் தேடுங்களேன்
எனக்காக..
உங்களுக்காகவும் தான்

எதையா?
என்னைத்தான்.

புரியவில்லை??

என்னை நான் தொலைத்து விட்டேன்.
நாட்டை விட்டு வரும் வழியில்

அல்லது -
வந்த உடனேயே எங்காவது.
இன்று கொஞ்சநேரம் கூட கணனியில் வேலை செய்துவிட்டு நேரதை பார்த்தால் ஒரு மணிக்கு மேலாகுது. இன்றைக்கு ஆடிப்பிறப்பு என்றது நினைவிற்கு வந்தது. வீட்டில் கூழும் கொளுக்கட்டையும் செய்வார்கள். நேற்று பனங்கட்டி, தேங்காய்ப்பூ எல்லாம் தமிழ் கடையில் வாங்கியாயிற்று. என்னதான் மனக்கவலை என்றாலும் எங்கட கலாச்சார நிகள்வுகளை விட ஏலாது தானே. எங்கடை முன்னோர்கள் எங்களுக்கு தந்ததை அடுத்த சந்ததிக்கு சரியான விளக்கத்தோடு சேர்க்க வேண்டி இருக்கு.

ஆடிப்பிறப்பை ஏன் கொண்டாடி இருப்பினம் எண்டதுக்கு சரியான விளக்கத்தை யோசித்து மண்டை காய்ந்தது தான் மிச்சம்..அடுத்த சில நாட்களுக்குள் கண்டுபிடித்தால் எழுதுகிறேன்

ஆடிப்பிறப்பு பற்றி நாவாலியூர் சோமசுந்தரப்புலவரின் ஒரு அருமையான பாடல்எழுதி இருக்கிறார்.

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
நிலவு என்றும்
மதியென்றும்
அர்த்த சந்திரன் என்றும்
வர்ணிக்க நீயோ
சூரியன் போலவே எரிக்கிறாய்.

தாமரை, அல்லி, ஆம்பல் என்றேன்
அதுதான் அல்லி இராட்சியம் நடத்துகிறாய்

முல்லை என்று சொன்னேன் தான் -
தேர் தான் கேட்பாய் என்று தெரியாமல்.

நீ அழகு தான் பெண்ணே!
ஆனால்
ன்னித்துவிடு. எனக்கு வேண்டாம்
நேற்றும்
இன்றும்
நாளையும் விடியும்-

வயது
ஒவ்வொரு நாட்களாக கூடும்

முன்னேற்றம்

வெகு ....று......லா..........!
எங்களுக்கு மட்டும்
இது விடியலே அல்ல.
வெறும் சூரியோதயமே.....

எனது இயற்பெயர் செல்லையா மகேஸ்வரமூர்த்தி ஆகும். இவ்வளவு பெரியபெயர் எதற்கென்று நானே சூட்டிய (சுருக்கிய) நாமம் மூர்த்தி என்பது. ஈழதேசத்தின் வடமாகாணத்தில் யாழ்குடாநாட்டில் சைவமும் தமிழும் தழைத்தோங்கிய குரும்பசிட்டி எனும் குக்கிராமத்தில் பிறந்து எண்பதுகளின்முற்பகுதியில்அகதி ஆகி இளவாலை, அளவேட்டி, உரும்பிராய், காக்காதீவு (கொழும்பு 15) ஆகிய பகுதிகளில் வசித்துவிட்டு இப்போது இங்கிலாந்தில்புலம்பெயர் வாழ்வு நடத்திவருகிறேன்.

மிக நீண்ண்ண்ட காலமாக ஒரு தமிழ் வலைமனை உருவாக்கவேண்டும் என்ற எனது ஆவலினால் பல தளங்களை உருவாக்கிய நான் பராமரிக்காமல் கிடப்பில் இட்டுவிட்டு மீண்டும் தமிழ்மணத்தில் பதிவிடும் முகம்தெரியாத தோழர்க்ளின் வலைத்தளங்களின் தாக்கத்தால் இலக்கியா என்ற இந்த வலைப்பதிவினை தொடங்கினேன். உங்கள் வருகையும் எனக்கு நேரமும் இருக்கும் பட்சத்தில் எனது மலரும் நினைவுகளையும் சிந்தனைகளையும் இடலாம் என்றிருக்கிறேன். வேண்டும் உங்கள் ஆதரவு.
இலக்கியா என்பது சில நண்பர்களும் நானும் சேர்ந்து காக்காதீவு தமிழ்மக்களுக்காக நடத்திய கையெழுத்து பத்திரிகையின்தலைப்பாகும். எனக்குவேண்டப்பட்ட பெண் பெயர் அல்ல என்பதைத் தாழ்மையாக கூறிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தமுறை தொடர்ந்து எழுத உதவிசெய்ய பாரதம் எழுத வியாசருக்கு உதவிய விநாயகரையும் மற்றும் யேசு, அல்லா, புத்தரையும் வேண்டி நிற்கிறேன்.

நன்றி, மீண்டும் வருக.
மூர்த்தி.