கந்தசஸ்டி காலம் ஆதலால் முருகப் பெருமானின் சிந்தனை மனத்தை நிரப்பி உள்ளது. நண்பர் கானா பிரபா தான் தரிசித்த முருகன் கோவில்களை ஆறு நாளும் எழுதுகிறார். அவரது கட்டுரைகளே ஆறு நாட்களில் ஆறுபடை வீடுகளை பற்றி எழுதும் இம் முயற்சிக்கு தூண்டுகோலாக அமைந்த்து.
இன்று முதலாம் நாளில் திருப்பரங்குன்றம் பற்றி பார்ப்போம். நான் இந்தவருடம் 27 வருடங்களின் பின் தமிழ்நாடு சென்றபோது சென்ற முதலாவது தலமும் இதுவேயாகும். மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியே கிடத்தட்ட 35 நிமிட தூரத்திலேயே அழகாக அமைந்திருக்கிறது இவ் ஆலயம். குழு குழு காரில் மதுரையின் பச்சையை அனுபவித்து மண்மணத்தை நுகரும் முன்னே கோவிலுக்கு வந்துவிடுகிறோம். வார நடுப்பகுதி என்பதால் ஆள் நெரிசல் இல்லாமல் வரிசை இல்லாமல் உடனேயே தரிசனம் கிட்டியது. மதுரையிலிருந்து இத்திருத்தலத்திற்கு பேருந்துகள் மூலமாகவும் போகலாம்.

தனிப்பெருங் கருணைக் கடலான முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதலாவது திருப்பரங்குன்றமாகும். முருகன் தெய்வயானையை திருமணம் புரிந்து ’குஞ்சரி மணாளன்’ ஆகியது இத்தலத்திலேயாம். மிக அழகான குடவரை கோவில். மலையைக் குடைந்து கோவிலாக ஆக்கிவைத்திருக்கிறார்கள் எமது முன்னோர்கள். கோவில் மூலஸ்தானத்தில் முருகன் அமர்ந்தபடி தெய்வயானையுடன் மணமுடிக்கும் கோலத்தை காண இரண்டு கண்களும் கண்ணாடியும் போதவில்லை. முருகனுக்கு அருகிலேயே நாரதருடன் தன் மகளை தாரைவார்க்க இந்திரனும், விவாக காரியங்கள் நிகழ்த்த பிரம்மாவும் மற்றும் சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரோடு சூரிய சந்திரர்களும் திருமணத்தை காண கூடியுள்ளனர். தெய்வயானை திருமணத்தின்பின்னரெயே வள்ளி திருமணம் நடந்ததால் முருகனுக்கு பக்கத்தில் வள்ளியை காணாமுடியாது என்ற தகவலை அர்ச்சகர் கூறினார்.
இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பெருமாள், விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் காணப்படுகின்றமை அரியதோர் காட்சியாகும். ஆதி சொக்கநாதப் பெருமானே மூல மூர்த்தி என்பதும் குடவரை கோவில் என்பதால் பிரகாரம் கிடையாது என்பதும் உபரித்தகவல்கள். இக்குன்றம் லிங்க வடிவில் காட்சியளிப்பதால் மலையையே சிவனாக வழிபடுகின்றனர்.

புத்தகங்களில் மட்டுமே படித்து வியந்த இத்தலத்தை கண்டு இரசித்து வாழ்நாளில் கிடைத்த வரம்! அடுத்தமுறை போகக்கிடைத்தால் கிரிவலம் வரவேண்டும். தீர்த்தங்களையும் காணவேண்டும்
இத் திருதலத்திகான திருப்புகழ்
(நன்றி : http://thiruppugazhamirutham.blogspot.ca)
சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனென் றென்றுற் றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.
பதம் பிரிக்க பின்வருமாறு அமையும்
சந்ததம் பந்த தொடராலே
சஞ்சலம் துஞ்சி திரியாதே
கந்தன் என்று என்று உற்று உனை நாளும்
கண்டு கொண்டு அன்பு உற்றிடுவேனோ
தந்தியின் கொம்பை புணர்வோனே
சங்கரன் பங்கில் சிவை பாலா
செந்தில் அம் கண்டி கதிர் வேலா
தென் பரங்குன்றில் பெருமாளே.
கருத்து:
சந்ததம் பந்தத் தொடராலே ... எப்பொழுதும் பாசம் என்ற தொடர்பினாலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே ... துயரத்தால் சோர்ந்து திரியாமல்,
கந்தனென்று என்று உற்று உனைநாளும் ... கந்தன் என அடிக்கடி மனதார உன்னை தினமும்
கண்டுகொண்டு ... உள்ளக் கண்களால் கண்டு தரிசித்து,
அன்புற்றிடுவேனோ ... யான்அன்பு கொள்வேனோ?
தந்தியின் கொம்பை ... (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த கொடி போன்ற தேவயானையை
புணர்வோனே ... மணம் செய்துகொண்டு சேர்பவனே,
சங்கரன் பங்கிற் சிவைபாலா ... சங்கரனின் பக்கத்தில் தங்கிய பார்வதியின் குழந்தாய்,
செந்திலங் கண்டிக் கதிர்வேலா ... திருச்செந்தூரிலும், அழகிய கண்டியிலும் ஒளிவீசும் வேலோடு விளங்குபவனே,
தென்பரங் குன்றிற் பெருமாளே. ... அழகிய திருப்பரங்குன்றில்அமர்ந்த பெருமாளே.
0 விமர்சனங்கள்:
Post a Comment