சிவனிடம் இருந்து பழம் பெறுவதற்காக உலகை சுற்றி வந்து சிவனுடன் கொபம் கொண்டு அமர்ந்த மலை பழனி என்ற மூன்றாவது படை வீடு என்று சிறுவயதில் படித்திருந்தாலும், மூன்றாவது படைவீடாக சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டது பழநியின் அடிவாரத்தில் இருக்கும் திருவாவினன் குடியையே ஆகும். இந்த திருத்தலத்தை திரு-என்ற இலக்குமி தேவியும், ஆ-என்ற காமதேனுவும், இனன்-என்ற சூரியனும் குடியிருந்து முருகப்பெருமானை வழிபட்டமையால் “திரு ஆ இனன் குடி” என்று பெயர் பெற்றது என்பார்கள். எது எப்படி ஆயினும் பழனி மலை மலைகளில் சிறந்தது என்பதற்கும் ஆண்டி கோலத்தில் தண்டோடு இருக்கும் தண்டாயுதபாணி தெய்வம் நாடி வந்தவர் நோய்களை தீர்க்கும் அருமருந்து எனபதிலும் ஐயமில்லை.

மதுரை விமான நிலைத்தில் இருந்து இரண்டு மணி நேரத்திலும் சென்னையில் இருந்து 5 மணி நேர மகிழூர்ந்து பயணத்திலும் பழனியை அடைந்துவிடலாம். கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் அழகாக காட்சி தருகிறது பழனிமலை. மலை
ஏறும் முன் திருவாவாவினன்குடியில் வள்ளி தெய்வயானையுடன் காட்சி தரும் முருகப் பெருமானையும் இம்மலையை கொண்டு வந்து இங்கு வைத்தவாரக கருதப்படும் இடும்பனையும் தரிசித்து 690 படிகள் ஏறினால் கருணக்கடலான எம்பெருமான் தண்டாயுதபாணி தெய்வமா காட்சி தருகிறார். சுற்றுலா பயணிகள், மலைக்கோயிலை சுற்றிப் பார்க்க ரோப்கார் (கம்பிவட ஊர்தி) வசதிகளும் உள்ளன.

2000 வருடங்களின் முன் வாழ்ந்த நந்தியெம்பெருமானின் சீட பரம்பரையில் வந்த போகர் என்பார் ஒம்பது விதமான நோய் தீர்க்கும் நச்சு பொருட்களையும் 4000 மேற்பட்ட மூலிகைகளைகளையும் கொண்டு 81 சித்தர்கள் உதவியோடு தயாரித்து நாடி வந்தவர் நோய்களை தீர்க்கும் முருகன் சிலையை வடிவமைத்து தந்திருக்கிறார். பழந்தமிழரான போகரின் மருத்துவ அறிவால் அமைக்கப்பட்ட முருகனின் நவபாஸாண சிலையில்
சாத்தி எடுகப்படும் சந்தனம் இன்று வரைக்கும் பலவித நோய்களை தீர்க்கின்றது. நவபாஷண சிலையை ஆராட்சி செயத விஞ்ஞானிகள் இச்சிலையின் மகத்துவம் குறித்து வியந்திருக்கிறார்கள் (சுட்டி கீழே).

தண்டாயுதபாணி விக்ரகம் சூடாக இருப்பதால் இரவு முழுவதும் விக்கிரகத்திலிருந்து நோய்களை நிவர்த்தி செய்யும் நீர் வெளிப்படும் என்றும் அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் பரவி நிற்கும் என்றும் அறியகிடைக்கிறது. விக்ரகம் மீது சந்தனத்தை அரைத்து பசைப் போல பூசி வைத்த பின் மறுநாள் எடுத்தால் அது மருத்துவச் சிறப்பு மிக்கதாகிறது என பக்தர்கள் நம்புகின்றனர். இந்தக் கோயிலில் வழங்கப்படும் பழனி பஞ்சாமிர்தமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இனி இத்தலத்திற்கான திருப்புகழ்:
(நன்றி : http://thiruppugazhamirutham.blogspot.ca)

அபகார நிந்தைபைட் டுழலாதே
அறியாத வஞ்சரைக் குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
உனைநானி னைந்தருட் பெறுவேனோ
இபமாமு கன்தனக் கிளையோனே
இமவான்ம டந்தையுத் தமிபாலா
ஜெபமாலை தந்தசற் குருநாதா
திருவாவி னன்குடிப் பெருமாளே.

பதம் பிரிக்க இப்படி வரும்:
அபகார நிந்தை பட்டு உழலாதே
அறியாத வஞ்சரை குறியாதே
உபதேச மந்திர பொருளாலே
உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ
இபமா முகன் தனக்கு இளயோனே
இமவான் மடந்தை உத்தமி பாலா
ஜெமாலை தந்த சற் குரு நாதா
திருவாவினன் குடி பெருமாளே.

பொருள்
அபகார நிந்தை பட்டு = தீமை செய்ததினால் நிந்தனைகளுக்கு ஆளாகி.
உழலாதே = அலையாமலும்
அறியாத = (நன்னெறியை) கைக்கொள்ளாத.
வஞ்சகரை = கயவர்களுடன்
குறியாதே = இணங்குவதைக் கருதாமலும்.
உபதேசப் பொருளாலே = உபதேச மந்திரப் பொருளையே துணையாகக் கொண்டு
உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ = உன்னை நான் நினைந்து உன் திரு வருளைப் பெற மாட்டேனோ.
இபமா முகன் தனக்கு = யானை முகம் உடைய விநாயகருக்கு
இளையோனே = தம்பியே
இமவான் மடந்தை = இமய ராசன் மகளாகிய பார்வதி என்னும்
உத்தமி பாலா = உத்தமியின் பிள்ளையே.
ஜெபமாலை தந்த சற் குரு நாதா = ஜெபமாலை ஒன்றை எனக்குத் தந்த சற்குரு நாதனே
திருவாவினன்குடிப் பெருமாளே = திருவா வினன் குடியில் வீற்றிருக்கும் பெருமாளே.

பாடல் சுட்டி:

பழனி ஆண்டவர் சிலை விஞ்ஞான சோதனை:
http://murugan.org/tamil/saravanan.htm

(2017-10-23)



முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்தில் அழகான கடற்கரைப் பகுதியில் அமைந்த திருத்தலமாகும். மதுரை விமான நிலையத்தில் இருந்து 200KM தொலைவிலும் சென்னையில் இருந்து 600KM தொலைவிலும் அமைந்துள்ளது. மதுரையில் இருக்கும் சுற்றுலா ஏற்பாட்டாளர்களின் சிற்றூர்ந்திலோ அல்லது சென்னையில் இருந்து புகையிரதம் மூலமோ திருச்செந்தூர் வரமுடியும்

தேவசேனைக்கு தலமை தாங்கி முருகன் சூரனை வெற்றிகொண்ட தலம் இதுவாகும். சூரனை வெற்றிகொண்ட முருகன் சிவனை பஞ்ச லிங்கங்களாக பிரதிஸ்டை செய்து வழிபட குரு பகவானின் ஆலோசனைப் படி தேவலோகத்தின் விஸ்வகர்மாவை கொண்டு இக் கோவிலை அமைப்பித்ததாக வரலாறு கூறுகிறது. எது எப்படி ஆயினும் கடற்கரையில் 150 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்துடன் கூடிய இக்கோவிலை அமைத்தமையை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. முருகப் பெருமான் தவக்கோலத்தில் கையில் தாமரை மலருடன் மூல மூர்த்தியாகவும் ஷண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய்ப் பெருமாள் என்று 4 உற்சவர்களாகவும் தனி தனி சன்னதிகளிலும் இருந்து அருள் பாலிக்கிறார். மூலவருக்கு பின்புறம் பஞ்ச லிங்ககளும் காணப்படுகின்றன.

முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது.முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். கந்தசஸ்டி காலத்தில் மிக விசேடமாக பூஜைகள் நடைபெற்று சூர சம்காரம் நடைபெறும். அதன் பின்னர் சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்பட்டு, கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வது இத்தலதின் சிறப்பாகும்.

தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது. தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் இக்கோவில் குறித்த தகவல்கள் இருப்பதால் இத்தலம் 2000 வருடங்களுக்கு முற்பட்டது என்பது ஐதீகம். கி.பி. 1648 பகுதியில் போத்துக்கீசர்கள் இக்கோவிலின் எழில்மிகுச் சிற்பங்களை உடைத்து எம் பெருமானின் ஐம்பொன் சிலைகளையும் பெருமளவு நகைகளையும் களவாடி இலங்கை நோக்கி கொண்டு சென்ற வேளையில் பெரும் புயல் தாக்கியதாவும் அவர்கள் சிலைகளை கடலில் விட்டதாகவும் தென்பகுதிக்கு திருமலையின் வரிவசூல் செய்யும் அலுவலராகப் பணியாற்றிய வடமலையப்பப்பிள்ளையின் கனவில் முருகன் வந்து அவரை சிலைகளை கடலில் இருந்து மீட்க பணித்ததாகவும் அறியக் கிடைக்கிறது. (சுட்டி கீழே). இலங்கை மன்னன் கண்டி அரசன் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி, சந்தன மரம் ஒன்றை வெட்டிக் கடலில் மிதக்க விடச் சொன்னதாவும் மன்னன் வெட்டித் தள்ளிய மரம் திருச்செந்தூர்க் கரையை அடைந்ததாவும் இன்றும் இந்த மரமே கொடிமரமாக உள்ளதாவும் திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் நூல் வாயிலாக அறிய முடிகிறது.

இனி இத் தலதிற்கான திருப்புகழ்: 
(நன்றி : http://thiruppugazhamirutham.blogspot.ca)

இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித் துழலாதே
உயர்கருணை புரியு மின்பக் கடல்மூழ்கி
உனையெனது ளறியு மன்பைத் தருவாயே
மயில் தகர்க லிடைய ரந்தத் தினைகாவல்
வனசகுற மகளை வந்தித் தணைவோனே
கயிலை மலை யனைய செந்திற் பதிவாழ்வே
கரிமுகவ னிளைய கந்தப் பெருமாளே.

பதம் பிரிக்க இப்படி வரும்:
இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி
இரவு பகல் மனது சிந்தித்து உழலாதே
உயர் கருணை புரியும் இன்ப கடல் மூழ்கி
உனை எனது உளம் அறியும் அன்பை தருவாயே
மயில் தகர் கல் இடையர் அந்த தினை காவல்
வனச குற மகளை வந்தித்து அணைவோனே
கயிலை மலை அனைய செந்தில் பதி வாழ்வே
கரி முகவன் இளைய கந்த பெருமாளே.

பத உரை
இயல் இசையில் = இயற்றமிழுடன் கூடிய இசை ஞானத்தில். உசித = தகுதி கொண்ட. வஞ்சிக்கு = மாதர்களுக்கு. அயர்வாகி = தளர்வு அடைந்து. இரவு பகல் = இரவும் பகலும். மனம் சிந்தித்து = அவர்களையே நினைத்து. உழலாதே = நான் அலையாமல்.
உயர் கருணை புரியும் = (உனது) உயர்ந்த கருணையால் வரும். இன்பக் கடல் மூழ்கி = இன்பக் கடலில் முழுகி. உனை = உன்னை. எனது உள = என்னுடைய மனத்தில். அறியும் = தெரிந்து கொள்ளும். அன்பைத் தருவாயே = அன்பைத் தந்து அருள்வாயாக.
மயில் தகர் கல் இடையர் = மயிலும், ஆடும் நிறைந்திருக்கும் மலையில் வசிக்கும் வேடுவர்களுடைய. அந்தத் தினை காவல் = அந்தத் தினைப் புனத்தில் காவல் பூண்டிருந்த. வனச = இலக்குமி போன்ற. குற மகளை = குறப் பெண்ணாகிய வள்ளியை. வந்தித்து = வணங்கி. அணைவோனே = அணைந்தவனே.
கயிலை மலை அனைய = திருக்கயிலை மலை போலப் (புனிதமான). செந்திற் பதி வாழ்வே = திருச்செந்தூரில் வாழ்பவனே. கரி முகவன் = யானை முக கணபதிக்கு. இளைய கந்தப் பெருமாளே = கணபதியாருக்குத் தம்பியாகிய பெருமாளே.



சுட்டிகள்:
திருச்செந்தூர் பற்றி 50 விடையங்கள் :
http://www.vikatan.com/…/spec…/vaikasi-visakam/article6.html

திருச்செந்தூர் தல வரலாறு
http://chendhurmurugan.blogspot.ca/p/blog-page_779.html

(2017 -10- 22)

 கந்தசஸ்டி காலம்  ஆதலால் முருகப் பெருமானின் சிந்தனை மனத்தை நிரப்பி உள்ளது. நண்பர் கானா பிரபா தான் தரிசித்த முருகன் கோவில்களை ஆறு நாளும் எழுதுகிறார். அவரது கட்டுரைகளே ஆறு நாட்களில் ஆறுபடை வீடுகளை பற்றி எழுதும் இம் முயற்சிக்கு  தூண்டுகோலாக அமைந்த்து.



இன்று முதலாம் நாளில் திருப்பரங்குன்றம் பற்றி பார்ப்போம். நான் இந்தவருடம்  27 வருடங்களின் பின் தமிழ்நாடு சென்றபோது சென்ற முதலாவது தலமும் இதுவேயாகும். மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியே கிடத்தட்ட 35 நிமிட தூரத்திலேயே அழகாக அமைந்திருக்கிறது இவ் ஆலயம். குழு குழு காரில் மதுரையின் பச்சையை அனுபவித்து மண்மணத்தை நுகரும் முன்னே கோவிலுக்கு வந்துவிடுகிறோம். வார நடுப்பகுதி என்பதால் ஆள் நெரிசல் இல்லாமல் வரிசை இல்லாமல் உடனேயே தரிசனம் கிட்டியது. மதுரையிலிருந்து இத்திருத்தலத்திற்கு பேருந்துகள் மூலமாகவும் போகலாம்.



தனிப்பெருங் கருணைக் கடலான முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதலாவது திருப்பரங்குன்றமாகும். முருகன் தெய்வயானையை திருமணம் புரிந்து ’குஞ்சரி மணாளன்’ ஆகியது இத்தலத்திலேயாம். மிக அழகான குடவரை கோவில். மலையைக் குடைந்து கோவிலாக ஆக்கிவைத்திருக்கிறார்கள் எமது முன்னோர்கள். கோவில் மூலஸ்தானத்தில் முருகன் அமர்ந்தபடி தெய்வயானையுடன் மணமுடிக்கும் கோலத்தை காண இரண்டு கண்களும் கண்ணாடியும் போதவில்லை.  முருகனுக்கு அருகிலேயே நாரதருடன் தன் மகளை தாரைவார்க்க இந்திரனும், விவாக காரியங்கள் நிகழ்த்த பிரம்மாவும் மற்றும் சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரோடு சூரிய சந்திரர்களும் திருமணத்தை காண கூடியுள்ளனர். தெய்வயானை திருமணத்தின்பின்னரெயே வள்ளி திருமணம் நடந்ததால் முருகனுக்கு பக்கத்தில் வள்ளியை காணாமுடியாது என்ற தகவலை அர்ச்சகர் கூறினார்.

இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பெருமாள், விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் காணப்படுகின்றமை அரியதோர் காட்சியாகும். ஆதி சொக்கநாதப் பெருமானே மூல மூர்த்தி என்பதும் குடவரை கோவில் என்பதால் பிரகாரம் கிடையாது என்பதும் உபரித்தகவல்கள். இக்குன்றம் லிங்க வடிவில் காட்சியளிப்பதால் மலையையே சிவனாக வழிபடுகின்றனர்.

ஆரம்ப காலத்தில், தென்பரங்குன்றம் எனும் குடவரைக் கோயிலே பிரதானமாக இருந்ததாகவும், இக்கோயில் சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்கு திசை நோக்கி திருப்பி அமைத்திருப்பதாகவும் ஆதலால் "திருப்பிய பரங்குன்றம்" என்றழைக்கப்பட்ட இவ்வூர் "திருப்பரங்குன்றம்" என்று மருவியராகவும் திரு P. காளீஸ்வரன்  என்பார் குறிப்பிட்டிருக்கிறார் (சுட்டி கிழே). இலக்கியங்களில் தண்பரங்குன்று, திருப்பரங்கிரி, பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என அழைக்கப்பட்டதும் இத் தலமேயாம்.

புத்தகங்களில் மட்டுமே படித்து வியந்த இத்தலத்தை கண்டு இரசித்து வாழ்நாளில் கிடைத்த வரம்! அடுத்தமுறை போகக்கிடைத்தால் கிரிவலம் வரவேண்டும். தீர்த்தங்களையும் காணவேண்டும்

இத் திருதலத்திகான திருப்புகழ்
(நன்றி : http://thiruppugazhamirutham.blogspot.ca)

சந்ததம் பந்தத் தொடராலே
     சஞ்சலந் துஞ்சித் திரியாதே

கந்தனென் றென்றுற் றுனைநாளும்
     கண்டுகொண் டன்புற் றிடுவேனோ

தந்தியின் கொம்பைப் புணர்வோனே
     சங்கரன் பங்கிற் சிவைபாலா

செந்திலங் கண்டிக் கதிர்வேலா
     தென்பரங் குன்றிற் பெருமாளே.

பதம் பிரிக்க பின்வருமாறு அமையும்

சந்ததம் பந்த தொடராலே
சஞ்சலம் துஞ்சி திரியாதே

கந்தன் என்று என்று உற்று உனை நாளும்
கண்டு கொண்டு அன்பு உற்றிடுவேனோ

தந்தியின் கொம்பை புணர்வோனே
சங்கரன் பங்கில் சிவை பாலா

செந்தில் அம் கண்டி கதிர் வேலா
தென் பரங்குன்றில் பெருமாளே.

கருத்து:
சந்ததம் பந்தத் தொடராலே ... எப்பொழுதும் பாசம் என்ற தொடர்பினாலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே ... துயரத்தால் சோர்ந்து திரியாமல்,
கந்தனென்று என்று உற்று உனைநாளும் ... கந்தன் என அடிக்கடி மனதார உன்னை தினமும்
கண்டுகொண்டு ... உள்ளக் கண்களால் கண்டு தரிசித்து,
அன்புற்றிடுவேனோ ... யான்அன்பு கொள்வேனோ?
தந்தியின் கொம்பை ... (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த கொடி போன்ற தேவயானையை
புணர்வோனே ... மணம் செய்துகொண்டு சேர்பவனே,
சங்கரன் பங்கிற் சிவைபாலா ... சங்கரனின் பக்கத்தில் தங்கிய பார்வதியின் குழந்தாய்,
செந்திலங் கண்டிக் கதிர்வேலா ... திருச்செந்தூரிலும், அழகிய கண்டியிலும் ஒளிவீசும் வேலோடு விளங்குபவனே,
தென்பரங் குன்றிற் பெருமாளே. ... அழகிய திருப்பரங்குன்றில்அமர்ந்த பெருமாளே.




ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமான் திரு P. காளீஸ்வரன் : http://www.kaumaram.com/articles/aarupadaiveedu_u.html