ஒவ்வொரு இனமும் தனித்துவமான போர் முறைகளையும் தற்பாதுகாப்புக் கலை மரபுகளையும் கொண்டுள்ளது. தமிழர் தற்காப்புக் கலைகளை அறிவதன் மூலம் தமிழர் கலாச்சாரம் மற்றும் வாழ்வியலை அறிய முடியும்.
பழந்தமிழர்கள் குரு-சீட பரம்பரைகள் மூலமாக தற்காப்புக் கலைகளை வளர்த்த்தோடு இல்லாமல் ஓலைச்சுவடிகள் மூலமாக இக்கலை வடிவங்களை ஆவணப்படுத்தியும் உள்ளனர். சங்க காலத்தில் இருந்து இன்று வரைக்கும் தமிழர்களால் அறிந்து வைத்திருக்கப்பட்டிருக்கும் சில தற்காப்புக் கலைகளைகளை இங்கு நேக்குவோம்.
களரிப்பயிற்று :
இன்றைய காலத்தில் கேரளாவில் பெரிதும் பயிற்றுவிக்கப்படும் கலையான களரிப்பயிற்று பண்டைய தமிழர்களின் ஒரு தற்பாதுகாப்புக் கலையாகும். இந்தகலை தமிழர்களின் கலை என்பது தமிழ் ஏடுகளின் மூலம் தெளிவாகிறது. களரி என்பது போர்ப்பயிற்சி செய்யும் களம், பயிற்று என்பது பயிற்றவித்தல் என்னும் பொருளில் அமைகிறது. வீர விளையாட்டுக் கலையான களரி எதிரியை தாக்கவும் மடக்கவும் உதவுகிறது.
களரி உருவாகிய இடங்களுக்கமைய வடக்கன் களரி, தெக்கன் களரி, கடத்தநாடன் களரி, துளுநாடன் களரி என நான்கு வகைப் பிரிவுகள் இருப்பதாக தெரிய வருகிறது. ஆதிகாலங்களில் போர் வீர்ர்களும் அரச பரம்பரையினரும் கற்ற இக்கலையானது பிற்காலங்களில் அனைத்து தரப்பினரும் பயிலும் தற்காப்புக்கலையாக தோற்றம் கண்டது.
வாய்மொழியாகக் குரு பாடலைப் பாட அதற்கேற்றார் போல் சீடர்கள் சுவடுகள் வைத்துப் பயிற்சியினை மேற்கொள்ளும் வாய்த்தாரி, உடம்பைப் பக்குவப்படுத்துவதற்காகச் செய்யும் சுவடு முறைகளைக் குறிக்கும் மெய்த்தாரி , ஆயுதங்கள் வைத்துச் செய்யும் பயிற்சி முறையான அங்கதாரி, கோல்த்தாரி எனும் கம்பு வைத்து செய்யும் பயிற்சி மற்றும் கை கால்களை மட்டுமே பயன்படுத்திச் செய்யும் வெறுங்கைப்பிரயோகம் எனபனவே களரிப்பயிற்சி வகைகளாகும்.
சிவன் அல்லது விஷ்ணுவை களரி தெய்வமாக வைத்து இரு புறங்களிலும் ஆயுதங்களை நிரப்பிவைத்து பயிற்சி நடக்கும் களரிப் பயிற்சியில் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப் படுத்தும் ஆசனப்பயிற்சிகளும் இடம்பெறும்.
அனேக களரி ஆசிரியர்கள் வர்மக்கலையும் அறிந்திருந்தனர். சிலம்பத்தில் பாவிக்கப்படும் ஆயுதங்கள் களரியிலும் பாவிக்கப்படுகின்றன.
மற்போர்
இன்று ஒரு சர்வதேச விளையாட்டாக தோற்றம் பெற்று ஒலிம்பிக்கில் கூட இடம் பெற்றிருக்கும் மல்யுத்தம் பண்டையகாலங்களில் மல்லாடல், மல்லுக்கட்டு என்ற பேயர்களில் பயிலப்பட்டது. ஆயுதங்களே இல்லாமல் இரண்டுபேர் ஈடுபடுவதே இக்கலையின் சிறப்பு. முதுகு தரையில் படும் படி பிடிபோட்டுத் தள்ளி விழச்செய்வதே இவ் விளையாட்டின் வெற்றியாகும்.
பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பல்லாண்டில் கண்ணனை “ மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!” என்று குறிப்பிட்டிருக்கிறார். மற்போர் எனற சொற்பதமும் இப்போர்க்கலையில் சிறந்தவர்களைக் குறிக்கும் மல்லர்கள் என்ற பதமும் பழந்தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் பாவிக்கப்படுள்ளது. ஆதி காலங்களில் மன்னர் சபைகளில் அரண்மனை வீர்களிடையே விளையாடப்பட்ட இக்கலை தனி வீர்ர்களின் வீரத்தை பறைசாற்ற பெரிதும் உதவிற்று.
மற்போர் பயிலும் பயிற்சிக்கூடங்கள் போரவை என்று அளைக்கப்பட்டன. சோழ அரசன் ஓருவன் போரவையையை நடத்தி வந்ததால் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி என்று அழைக்கப்பட்டான் என்று அறியக் கிடைக்கிறது.
சிலம்பம்
கம்பு சுழலும் போது எற்படும் ஓசையினைக் குறிக்கும் வகையில் ஆதி தமிழர்களால் சிலம்பம் என்று பெயரிடப்பட்ட இத் தற்பாதுகாப்புக் கலையானது நீளாமான தடியை பாவித்து எதிராளியுடன் போர் புரியும் முறையாகும். தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மை பாதுகாத்தல் என பல கூறுகளை இக்கலை உள்ளடக்கியிருக்கிறது.
திருக்குறளில் “கோல்” என்றும் கலிங்கத்துப்பரணியில் “தண்டு” என்றும் சிலம்பத்தில் பாவிக்கப்படும் கம்பு குறிப்பிடப்பட்டிருக்கிறது. கம்பு சூத்திரம், குறந்தடி சிலம்பம், நடசாரி என்ற ஓலைச்சுட்டிகள் மூலமாகவும் இக்கலை பண்டைக்காலத் தமிழனின் வீர விளையாட்டென தெரிகிறது. ஆதிச்சநல்லூர் அகழ்வாராட்சியில் கி.மு 2000க் கும் முற்பட்ட 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஒலைச்சுவடிகளில் பலவேறு வகையான சிலம்பாட்ட வகைகள் கூறப்பட்டிருந்தாலும் இன்றைக்கு அலங்காரச் சிலம்பம், போர் சிலம்பம், குறவஞ்சி சிலம்பம், பனையேறி மல்லு, துலுக்கானா, நாகதாளி, நாகசீறல், கள்ளன்கம்பு என்னும் வகைகள் காணப்படுகின்றன. அலங்காரச் சிலம்பம் என்பது அரசர் காலத்தில் திருவிழாக்கள் மற்றும் கேளிக்கைகளுக்காக விளையாடப்படுவது. போர் சிலம்பம் வன விலங்குகள் மற்றும், எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஆடப்படுவது ஆகும்.
வளரி
வளைந்த ஒருவகைத் தடியைப் பிரையோகிக்கும் கலையே வளரியாகும். இக்கலையானது தமிழர்கள் தவிர ஆஸ்திரேலிய பழங்குடியினரிடத்திலும் காணப்படுகிறது. மரத்தினால் செய்யப்படும் பிறை வடிவினிலான வளரியின் ஒரு முனை மற்றைய முனையை விடக் கனமானதாக இருக்கும். சில சமையங்களில் இரும்பாலும் செய்யப்படும் இவ்வாயுத்தை லேசான முனையில் பிடித்து, வேகம் கொடுப்பதற்காக சிலமுறை உயரே சுளற்றி விசையுடன் இலக்கை நோக்கி வீசுவதன் மூலம் எதிரிராளியை காயமடையச் செய்வார்கள்.
மருது பாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் காலங்களில் ஆங்கிலேயருக்கு எதிராக பெரிதும் பாவிக்க்கப்ட்ட வளரி வீச்சுக்கலையானது தற்போது அருகிவந்தாலும் முயல், குள்ளநரி வேட்டையில் இன்றும் பாவிக்கப்படுகிறது.
வர்மம்.
எதிராளியின் முக்கியமான நாடி நரம்புகள் அல்லது உடம்பில் உள்ள குறிப்பிட்ட புள்ளிகளில் கையாலோ ஆயுதங்கள் மூலமாகவே தாக்கி எதிராளியை செயலிளக்க வைக்கும் கலையே வர்மக்கலையாகும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளான வர்மங்கள் இருக்கினறன என தேரிகிறது.
தமிழ் முன்னோர்களின் வைத்திய, விஞ்ஞான அறிவுக்கு சான்றாக திகளும் இக் கலை ஆபத்துக் காலங்களில் தாங்களே தங்களை பாதுக்கப்பதற்காக வீர்ர்களுக்கு பயிற்றப்பட்டது. இச்சீரிய கலையானது ஒருவரை காக்கும் பொருட்டு எதிரியின் மர்ம உறுப்புகளில் தாக்கி ஒரு கணத்துக்கு நினைவிளக்கச் செய்து தன்னை ஆசுவாசப்ப்டுத்திக் கொள்ள உதவியது. பாதிக்கப்பட்ட எதிரியை மீண்டும் சாதாரண நிலைக்கு வரும்படி செய்வதும் இக்கலையின் தர்மமாகும்.
வர்ம பீரங்கி, வர்ம சூத்திரம் என்னும் ஓலைச்சுவடிகள் வாயிலாக வர்மபகுதிகளையும் பிரயோகிக்கும் முறைகளையும் அறிந்து கொள்ளமுடியும். வர்மக்கலை ஒரு வைத்திய முறையாக பாவிக்கப்பட்டு சித்தர்களால் செவிவளியாக பயிற்றுவிக்கப்பட்டது. இன்றும் இக்கலையை மருத்துவத்திற்கு பாவிக்க முடியும் என்று தெரிறகிது.