Showing posts with label குரும்பசிட்டி. Show all posts
Showing posts with label குரும்பசிட்டி. Show all posts
ஆசிரியரைப்பற்றி:
ஆவண ஞானி இரா கனகத்தினம் அவர்கள் ஈழத்தில் குருமபசிட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். 1956ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை கிட்டத்தட்ட 56 வருடங்களாக இலங்கைத்தமிழர் வரலாற்றை ஆவண வடிவமாகத் தொகுத்து வருவதை முழு நேர சேவையாக செய்துவருகிறார். 1890 முதல் 2011 வரையான 121 வருட வரலாற்று, அரசியல், கலாச்சார செய்திக் குறிப்புகள், நாழிதள்கள், படங்களை தனது வாழ்க்கையே அர்ப்பணித்து திரட்டியவர்.

தான் பிறந்த குரும்பசிட்டியிலும் பின்பு கண்டியிலும் ஆவணக்காப்பகத்தை நிறுவி தனிமனிதனாய்  2000 ஆண்டுவரை திரட்டிய இரா கனகரத்தினம் அவர்கள் இலங்கை இராணுவத்தின் கெடுபிடிகளால் கிளிநொச்சிக்கு காப்பகத்தை கொண்டு செல்லவேண்டியிருந்தது. அங்கு தமிழர் வரலாற்று வடிவங்களை திட்டமிட்டே அழித்து வரும் சிஙகளர்களால் ஒரு நூற்றாண்டு கால ஆவணங்களும் தீக்கிரையானதுஇதற்கு சில வருடங்களின் முன்பு 75 வீதமான் ஆவணங்கள் நுண்படச் சுருள்களாக ஆக்கப்ப்ட்டு அன்னிய தேசம் ஒன்றில் பாதுகாகப்படுவது மனதிற்கு ஆறுதல் அழிக்கிறது.

தமிழர் வாழும் தேசங்களில் எல்லாம் பண்பாடும் மொழியும் காப்பாற்றப் பட வேண்டும் என்ற உத்வேகத்துடன் உலகத்தமிழர் பண்பாட்டு கழகம் என்ற அமைப்பை 1974 ம் ஆண்டு வேறு சில அறிஞர்களோடு பல கெடுபிடிகளுக்கு மத்தியில் தாபித்தவர் திரு கனகரத்தினம் என்றால் மிகையாகாது. தமிழர் வாழும் தேசங்கள் என்றால் இந்தியா, இலங்கை, சிஙகப்பூர், மலேசியா என்று வரலாற்றாசிரியர்கள் கற்பித்துவந்த காலத்தில் அலைகடல்களுக்கு அப்பால் தமிழர் என்ற நூலினூடு இந்தொனேசியா முதல் கரிபியன் தீவுகள் வரை பரந்துவாழும் எமது உறவுகள் பற்றிய தகல்வகளை தந்தவர் இரா கனகரத்தினம் அவர்கள்.

தந்தை சொல்வநாயம் பற்றிய ஒரு புத்தகம்சீசரின் தியாகம் (1952), அலைகடல்களுக்கு அப்பால் தமிழர்(1983), உலத்தமிழர் ஐக்கியத்தை நோக்கி(1974), மொறிசியசு தீவில் எங்கள் தமிழர்(1980), இறீயூனியன் தீவில் எங்கள் தமிழர்(1989) ஆகிய நூல்களை ஏற்கனவே எழுதி உள்ளார்.

இலை மறை காயாக வாழ்ந்து ஈழத் தமிழ் வரலாற்றை ஆவணப்படுதும் இப் பெரியாரை வாழும் காலத்திலேயே கௌரவிப்பது தமிழர்கள் அனைவரது கடமையாகும்.

நூல் 1 : ஒரு குடையின் கீழ் உலகத் தமிழினம்
உலகத் தமிழர்களை ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவரவேண்டும் என்ற ஆசிரியரின் கொள்கையில் இருந்து உருவான இன்னூல் அனைத்து தமிழர்களும் படிக்க வேண்டிய ஒன்று. உலகத் தமிழர் இயக்கம் ஆரம்பிக்க ஏதுவான காரணங்களையும் அதனை ஸ்தாபிக்க உதவியவர்கள் பற்றியும் எவ்வாற்றான கெடுபிடிகளுக்கு மத்தியில் அவ் அமைப்பு உருவாக்கப்பட்ட்து என்றும் விரிவாக தனது மனப்பதிவுகளை முதலாவது பகுதியில் ஆசிரியர் விபரித்திருக்கிறார்.

இரண்டாவது பகுதியில்  உலகெங்கணும் பரந்துவாழும் தமிழர்களை  - முக்கியாமாக 18ஆம் நூற்றாண்ட்டில் இடம் பெயந்தவர்கள்  - பற்றிய செய்திகளை விபரமாக தொகுத்து வழங்கிகப்பட்டிருக்கிறது.  அலை கடல்களுக்கு அப்பால் பல சிறிய தீவுகளில் ஆங்கிலேயர்களாலும் பிரான்சியர்களாலும் குடியேற்றப்பட்ட மக்களின் தகவல்கள் வியப்படையச் செய்வதோடு இன்று  புலம் பெயந்த தமிழர்கள் தமிழ் மொழியை பண்பாட்டு விழுமியங்களை சந்ததிக்கு கொடுக்காமல் விட்டால் என்ன நடக்கும் என்பதையும் கடந்த கால வரலாறு ஐயமுற தெரிவிக்கிறது.

சிங்கப்பூர், மலேசியா, மியன்மார், அந்தமான் நிக்கொபார் தீவுகள், ரினிடாட், மார்த்தினிக், குவாட்லொப், சீசெல்ஸ், பிஜித்தீவுகள், தென் ஆபிரிக்கா, மொரிசியஸ், இறீயூனியன், இந்தொனீசியா வாழ் தமிழர்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ஆசிரியர் இன்னும் சில ஆய்வு செய்யப்படாத நாடுகளையும் பட்டியலிட்டிருக்கிறார்.

நூல் 2: ஒரு நூற்றாண்டு இலங்கைத்தமிழர் வரலாறு மைக்கிறோபிலிம்களில்
வரலாறு இன்றேல் தமிழர் வாழ்வே இல்லை என்ற ஆவணக்காப்பகத்தின் தாரக மந்திரத்தை புடம் போட்டுக்காட்டும் இக்கைநூல் தமிழர்கள் வரலாற்றை ஏன் ஆவணப்ப்டுத்தவேண்டும் என்ற கேள்விக்கு விடை காண்பதோடு ஆசிரியர் எப்படி ஆவண காப்பகத்தை உருவாக்கினார் என்ற வரலாற்றை விளக்குகிறது.

ஏலவே குறிப்பிட்ட்து போன்று ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட இலங்கைத்தமிழர் வரலாறு மைக்கிறோபிலிம்களில் தொகுக்கப்படுள்ளது. ஆவணங்களை தொகுக்க ஆசிரியருக்கு உறுதுணையாகி நின்றவர்களின் பெயர்களும் ஆவணங்கள் சேகரிக்கப்பட்ட தினசரி, வார ஏடுகளின் பட்டியலும் தரப்படுள்ளன.

இலங்கையில் தோன்றி மறைந்த பல்வேறு சஞ்சிகைகள், வாரப் பத்திரிகைகள், பழந்தமிழ் ஏடுகள், காட்டூன்கள் மற்றும் செய்திகளின் மூலங்கள் எல்லாம் ஆவணக்காப்பத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. தமிழர்களின் பல தலைமுறைகளுக்கு கிடைத்திருக்க வேண்டிய சொத்து ஒரு நாளில் தீயால் அழிக்கப்பட்டது

நார்வே நாட்டின் பண உதவியுடன்  75 வீதமான ஆவணங்கள் நுண்பட சுருளாக்கப்பட்டன. இவற்றில் ஒரு தொகுதி சுவிஸ்லாந்து யுனஸ்கோ ஆவணக்காப்பகத்தில் எதிகால சந்ததியினரின் பார்வைக்காக  வைக்கப்பட்டுள்ளன.   இன்னும் ஒரு பெரிய தொகுதி புகலிட நாட்டொன்றில் பாதுகாப்பாக உள்ளது. 25 வீதமான ஆவணங்கள் முற்றிலும் அழிந்து விட்டன. இந்த நுண்பட சுருள்களை பற்றி இக் கையேடு விளக்குகிறது.

இன்னூலை வாசித்த பிறகு இவ் ஆவணங்களை ஆசிரியரின் வாழ்நாளில் எல்லோருக்கும் பயன்படும்வகையில் வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட ஆவல்.






ஆசிரியர் கலாசாலையிலே தான் பயின்று பல
ஆசான்களை உருவாக்கியவர் எம் தந்தை.
தாய்மொழியாம் தமிழதனை பலபேர்க்கு
தடையின்றி கற்பித்த கல்விக்கடல்.

நிமிர்த்து அவர் நடை, நேரியது அவர் பார்வை
சரியானதை சரியென்று வாதிடும் அவரது நா.
குறுகியது அவர் தோற்றம், மகா மேரு
மலையிலும் பெரியது அவரது மனம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழவேடுமென
மற்றோற்கு உதாரணமாய் வாழ்ந்தவர் அவர்
மேன்மக்கள் படங்கள் தனை தேடித்தேடி
வீட்டுக்கூடத்தில் அலங்கரித்தவர் அவர்

அவர் சித்திரம் தீட்டிய வெற்றுத்தாள் கதை சொல்லிற்று
அவர் அணிந்ததனால் வெள்ளைவேட்டி கர்வப்பட்டது
அவர் பாடம் கேட்டவர் அறிஞர்கள் ஆனார்கள்
அவர் சொற்கேட்டோர் உத்தமர் ஆகினர்

அவர் எங்களுக்கு புகட்டிய இதிகாசங்களுக்கு அளவில்லை
அவர் காட்டிய பாசம் இலக்கியத்தில் இடம்பெறவில்லை
அவர் வேண்டிவைக்காத நல்ல தமிழ் புத்தகம் இல்லை
அவரை கொண்டாடத குரும்பசிட்டி உறவுகளும் இல்லை

எமக்கு தந்தை, என் தாய்க்குப் பதி
அவர் தம்பிதங்கைக்கு நல் அண்ணன்
ஊரோர்ருக்கு ஆசிரியர்
த க செல்லையா எனும் நாமங்கொண்ட
ஒர் நல்ல மனிதர்.




நாட்டுக்கு நன்மை புரிபவர், நல்லதம்பிப் பெரியாரிவர், கூட்டுக்குடும்பங்கள்....என்று தாளலயத்தோடு பொன்னுத்துரை அவர்கள் ஆடி நாடகம்பழக்கும் போது அந்தக் கற்பனை பெரியாராகவே ஆகிவிடுவோம் நாங்கள். வேட்டியை மடித்துக்கட்டி வெறும் கையை குடை போல் பிடித்து காலை அகலவைத்து நடந்து அவர் காட்டுகையில் நடிகர் சிவாஜி எல்லாம் எந்தமட்டு?

வானொலி நாடகங்களை கேட்டுவிட்டு முத்தமிழில் மூன்றாவதாக ஏன்நாடகங்களை சேத்தார்கள் என்று வியந்து கொண்டு இருந்தபோது எங்களூர் (குரும்பசிட்டி) சன்மார்க்கசபையில் (சனசமூக நிலையம்) தாளலய நாடகங்களை கொண்டுவந்து அரங்கேற்றி நாடகம் என்றாலே புதுவிளக்கம் கொடுத்தவர் ரி பொன்னுத்துரை அவர்கள்.

இவர் நடித்த பொறுத்தது போதும் நாடகம் (திரு தாஸீஸியஸ் இயக்கியது?) விடியவிடிய பார்த்துவிட்டுவந்திட்டு வந்திட்டு போறியோ மச்சான்என்று முணுமுணுத்தது 25 வருடங்களுககு முன் என்றாலும் இப்போ நடந்தது போல் கண்ணுககுள் நிற்கிறது. அப்போது நாங்கள் சிறுவர்கள் ஆதலால் கடற்கரைப்பக்கம் அதிகம் விடமாட்டார்கள். இந்த நாடகத்தின் மூலமே மீன்பிடித் தொழிலின் முறை தலைகளை அறிந்து கொண்டேன். அதன் பிறகு சிறிது காலத்தால்பொன்னுத்துரை அவர்கள் நடித்த இன்னுமொரு நாடகம் (திரு சங்காரம்?) வாயிலாக மனித மனங்களை போட்டு ஆட்டும் பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை ஆகியவை பற்றிய அறிவும் கிடைத்தது.

இந்த நாடகங்களின் தாக்கத்தாலேயே நாடகம் பழகவேண்டும் என்ற ஆவல்ஏற்பட நானும் இன்னும் சில தோழர்களும் சன்மார்க்கசபையின் பின்புறத்தேஇருந்த கட்டிடத்தில் பொன்னுத்துரை அவர்களிடம் நாடகம் பழகினோம். நாட்டுபிரச்சனைகள் காரணமாக இடையில் நின்று விட்டது. ஆனாலும் பிற்குவாழ்க்கையில் நடிக்க அது உதவிற்று.

நீங்கள் தாளலய நாடகங்கள் பாத்திருக்கிறீர்களா? நாடகத் தமிழின் சுவையைஉணர்ந்திருக்கிறீர்களா? எங்களூர் பொன்னுத்துரையை தெரியுமா?

பின் இணைப்பு: தற்சமயமாக google இல் தேடும் போது இன்னுமொரு பொன்னுத்துரை ப்ற்றிய பதிவு தினக்குரலில் கிடைத்தது. அதுவும் சரியாக ஒரு வருடத்தின் முன் பதியப் பட்டிருந்தது. அதை அப்படியே பிரதி செய்திருக்கிறேன்.....

நாடகத்துறையில் பல சாதனைகளை நிலைநாட்டிய கலைப்பேரரசை நினைவு கூர்வது காலத்தின் தேவையாகும் - செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன்

"கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை சிறுவயது முதல் நாடகத்துறையில் அதிக ஈடுபாடுகொண்டு பல சாதனைகளை நிலைநாட்டியவர். அவரால் எழுதப்பட்ட பல நாடகங்கள் அவரது ஆற்றலை மக்களுக்கு எடுத்தியம்பின, நாடகங்களில் சிரிப்பும் சிந்தனையும் இருந்தால்தான் அதனை மக்கள் இரசிப்பார்கள் எனக் கூறும் கலைப் பேரரசால் மேடையேற்றப்பட்ட நாடகங்களில் அவரே முக்கிய பாத்திரங்களில் நடித்து தனது நடிப்பாற்றலை வெளிக்காட்டினார். அவரது நடிப்பால் தாளக்கட்டும், ஓசைநயமும் உச்சரிப்புத் தெளிவும் இருக்கும். எப்போதும் நடிப்பு குரலிலும் தெரிய வேண்டும் என கூறுபவரும் அவரேதான்'

இவ்வாறு, கலைப் பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை நினைவு விருது வழங்கும் வைபவத்தில், சிறப்புரையாற்றிய தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்கா தேவஸ்தான தலைவரும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக்கல்லூரி அதிபருமான செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் தெரிவித்தார்.

இவ்விருது வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதின மண்டபத்தில் யாழ்.இலக்கிய வட்டத்தலைவர் கலாநிதி கே.குணராசா தலைமையில் நடைபெற்றது. வைபவத்தில், இவ்வாண்டுக்கான கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை விருது, சிறந்த வில்லுப்பாட்டுக் கலைஞர் கலாபூசணம் சின்னமணி க.நா.கணபதிப்பிள்ளைக்கு வழங்கப்பட்டது. விருதினை பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை வழங்கிக் கௌரவித்தார்.

ஆறு. திருமுருகன் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

கலைப்பேரரசு தமிழ்நாடு கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ராகி மைடியர் நாடகத்தை மேடையேற்றி நடித்துப் பாராட்டப்பட்டவர். அவர் இந்தியாவில் படித்த காலத்தில் குவேனி, முதலாளி, தொழிலாளி போன்ற நாடகங்களும் அவரால் மேடையேற்றப்பட்டன. சிறுவயதில் அவரது நாடக ஈடுபாடு பின்னைய காலங்களில் அவரை ஒரு நல்ல கலைஞனாக அடையாளப்படுத்தின. ஈழத்தின் நாடகக் கலைஞர் கே.கே.வி.செல்லையாவுடன் இணைந்து மேடையேற்றி நாட்டாமை நாகம்மா, அல்லி அர்ச்சுனா போன்ற நாடகங்களும் வசாவிளான் மகாவித்தியாலயத்தில் மேடையேற்றப்பட்ட பக்த துருவன், உலோபியின் காதல், விதியின் சதி ஆகிய நாடகங்களும் மேடையேற்றப்பட்ட போது கலைப் பேரரசின் நடிப்பாற்றலை எல்லோரும் அறிந்து கொண்டனர்.

அவரை ஒரு சிறந்த நடிகராக வெளியுலகுக்கு அறிமுகம் செய்த நாடகம் தாளக் காவடி பக்திக் கூத்தாகும், இதனை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முதன் முதலில் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பியது. கந்தபுராண கலாசாரத்தின் தனித்துவ சின்னமாக நேர்த்திக்கடன் முழுபக்திக்கூத்தாக அன்றைய காலகட்டத்தில் பிரபல்யமாக இருந்தது. இந்நாடகம் பின்னர் மாவட்டபுரம் கந்தசாமி கோவில் உற்சவகாலத்திலும் வெளியிடங்களிலும் மேடையேற்றப்பட்டு சிறந்த கலைஞராக அவர் பரிணாமம் அடைந்தார். அவரது 25 வருட கலையுலக வாழ்வைப் பாராட்டி குரும்பசிட்டி சன்மார்க்க சபை ஏற்பாடு செய்த விழாவிலே கலைப்பேரரசு பொன்னுத்துரை பெரிதும் நேசிக்கும் கலையரசு சொர்ணலிங்கத்தால் கலைப்பேரரசு பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இத்தனை பெருமைக்குரியவரான கலைப் பேரரசை நாம் நினைவு கூருகின்றோமானால் அதுகாலத்தின் தேவையாகவுள்ளது, அவரது மறைவு காலத்தின் நியதியாக கருதினாலும், அவரை நினைவு கூர்ந்து வருடாவருடம் வாழும் கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது நாம் கலைத்தாய்க்குச் செய்யும் பெரும் பேறாகும். பண்பாட்டு விழுமியங்களை பேணும் கலைஞர்களை நாம் கௌரவிப்பது எமது சமுதாயக் கடமையாகுமென்றார்.

தலைமையுரையாற்றிய கலாநிதி கே.குணராசா தமது உரையில்,

கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை, நாடகத்துறையில் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தாரோ அந்தளவிற்கு ஈழத்து இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு கொண்டிந்தார். அவர் மாத்தளையில் புனித தோமையார் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் மாத்தளை இலக்கிய வட்டம் என்ற அமைப்பை உருவாக்கி ஈழத்து இலக்கியப் பரப்பில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். பின் யாழ்ப்பாணத்தில் ஆசிரியராக பணியாற்றும் போதே யாழ். இலக்கிய வட்டத்தை, கனக செந்திநாதன், ஈழவாணன் போன்ற ஈழத்து தமிழ் இலக்கியகர்த்தாக்களை இணைத்து உருவாக்கினார். அவரது பெருமுயற்சி இன்று யாழ்.இலக்கிய வட்டத்தை பெருவிருட்சமாக உருவாக்கியுள்ளது. அவரது நாடக வாண்மை சகலராலும் போற்றப்பட்டது, அவர் முத்தமிழுக்கும் பெரும் பணியாற்றியுள்ளார் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை. அத்தகையவரை நினைவுகூர்ந்து வருடா வருடம் நம்வாழும் கலைஞர்களை கௌரவிப்பது பெரும் சிறப்பாகும் என்றார்.

வாழ்நாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை உரையாற்றுகையில்; ஏ.ரி.பொன்னுத்துரை இயல்பாகவே எல்லோருடனும் இனிமையாகப் பழகுவர். அவர் பேசும் போது எப்போதும் நாடகத்துறையில் புதிய யுக்திகளை பழைமை மாறாது புகுத்த வேண்டுமெனவே பேசுவார், பேசும் போதே ஒரு நல்ல கலைஞனாக மாறிவிடுவார். அவர் நடித்த நாடகங்கள் மக்கள் மனதை கவர்ந்தமைக்கு அவரது நடிப்புத்தான் காரணம், நாடக உலகில் அவர் பதித்த தனித்துவ முத்திரையை எவரும் அழித்துவிட முடியாது. அவர் எப்போதும் நிறுவன ரீதியாகவே தன் ஆற்றலை வெளிப்படுத்துபவர். அவரால் மேடையேற்றப்பட்ட விதியின் சதி நாடகத்தில் முதன் முதலில் பெண்பாத்திரத்தை பெண் தான் நடிக்க வேண்டுமென புரட்சி செய்து செயல்படுத்திய பெருமைக்குரியவர்.

தமிழர் பண்பாட்டியலில், நாடகம் முக்கிய பங்கு வகிக்கின்றது.அந்த வகையில் கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரையும் நாடகக்கலை மேம்பாட்டுக்கு தன்னை அர்ப்பணித்த கலைஞனாக வரலாற்றில் இடம்கொண்டுள்ளார். இன்றைய நிகழ்வு அவரை நினைவு கூரவும் அவரது நினைவாக வாழும் கலைஞர்களை வாழ்த்தவும் கௌரவிக்கவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த கௌரவிக்கும் மாண்பு தமிழர்களுடைய பண்பாடாகும். கலைஞர்கள் எம்மை மகிழ்விப்பவர்கள் எமது பண்பாட்டை மேம்படுத்துபவர்கள். புதிய கலை வடிவங்களை உருவாக்குபவர்கள் அவர்களை வாழ்த்துவதும் பாராட்டுவதும் எங்கள் கடமையாகும் என்றார்.