இந்த முறை கந்தசஸ்டி விரத காலத்தின் முதல் நாள் தொடக்கம் நேற்றுவரை ஆறுபடை வீடுகள் பற்றி முகநூலில் எழுதியிருந்தேன். இந்தவருடம் 27 வருட கனவுகளில் ஒன்று பூர்த்தியாகிய வருடம். ஆறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றத்திற்கும் பழமுதிர்சோலைக்கும் போக முருகன் அருள் கிடைத்தது. மற்ற படை வீடுகளுக்கு போகும் பாக்கியமும் சீக்கிரமே கிட்டும். போன இடத்தில் அறிந்த பார்த்த மற்றும் படித்த சேதிகளில் கலவையாகவே இந்த கட்டுரைகளை எழுதினேன்.

படங்களும் திருப்புகழ் விளக்கங்களும் பாடல் ஒளி நாடாக்களும் இணையதில் சுட்டவை தான். என் எழுத்துஇங்கு ற்றியிருக்கிற்றேன். இன்னனும் வாசிக்காதவர்கள் வாசித்து நல்லனவையையும் தவறுகளையும் சுட்டிக்காட்டினால் அகம் மகிழ்வேன்.


அழகிற்கு அழகான சிங்கார வேலனாம் எங்கள் முருகப் பெருமான் குடியிருக்கும் ஆறாவது படைவீடு அழகர்மலையில் உள்ள பழமுதிச்சோலையாகும். மதுரையில் இருந்து 19 கி.மீ தூரத்தில் உள்ளது கள்ளழகர் கோவில். இக்கோவிலில் இருந்து 3 கிமீ தூரதில் அழகிய சோலைகளால் சூழப்பட்டு உயரமான ராஜ கோபுரத்துடன் அமைதியாக காட்சி தருகிறது பழமுதிசோலை. இம் மலையை சோலைமலை, திருமாலிருஞ்சோலை மற்றும் திருமாலிருங்குன்றம் என்றும் அழைப்பர்.

முருகப்பெருமான் ஒளவையாருக்கு சுட்ட பழம் கொடுத்து கற்றது கைமண்ணளவு என்று புரிய வைத்தது இம்மலையிலேயாம். இன்றைக்கும் முருகன் இருந்த நாவல் மரத்தின் கிளை மரம் காணப்படுகிறது. ஆலயத்திற்க்கு போகும் வழியில்லேயே மகிளூர்ந்தை நிப்பாட்டி இம்மரத்தையும் கீழே உள்ள சிறிய வினாயகரையும் தரிசித்து ஆலயதிற்கு போனோம். சோலைமலை ஆண்டவர் வள்ளி தெய்வயானையுடன் மூலவராக அழகாக காட்சி தருகிறார். நாங்கள் கிழமை நாளில் போனதால் மிக அமைதியாக அபிடேகம் பார்க்க கிடைத்தது நான் முற்பிறப்பில் செய்த தவம். இந்த மதுரைக்காரர்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்?

அழகர்கோவிலே பழையகாலத்தது என்றும் பண்டைய காலத்தில் மலையின் மீது ஒரு வேலை வைத்து வழிபட்டனர் என்றும் பிற்காலத்தில் இக் கோவில் கட்டப்பட்டத்தென்றும் குறிப்புகள் கிடைக்கின்றன. ஆனால் சிலப்பதிகாரத்திலேயே இந்தக் குன்றத்தில் புண்ணிய சரவணம் என்ற பொய்கை இருந்ததாக கூறப்படுள்ளது. அருணகிரிநாதர்
பழமுதிச்சோலையா பற்றி 16 திருப்புகழ்கள் எழுதியுள்ளார்.பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் அபூர்வ மூலிகைகளும் இரும்புச்சத்து, தாமிரச்சத்துகளும் செறிந்திருக்கும் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு.
திருமாலுக்கும் மருகன் திருமுருகனுக்கும் புனிதத்தலங்கள் அமைந்துள்ள இந்தமலைக்கு போகும் போது கிடைக்கும் மன அமைதி சொல்லில் அடங்காதது!




இனி தலதிற்கான திருப்புகழ் ஒன்று 
(நன்றி : http://www.kaumaram.com)
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.

விளக்கம்:
அகரமும் ஆகி ... எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல எப்பொருளுக்கும் முதன்மையாகி
அதிபனும் ஆகி ... எல்லாவற்றிற்கும் தலைவனாகி
அதிகமும் ஆகி ... எல்லோருக்கும் மேம்பட்டவனாகி
அகமாகி ... யாவர்க்கும் உள்ள - யான் - என்னும் பொருளாகி
அயனென வாகி ... பிரமன் என்னும் படைப்பவன் ஆகி
அரியென வாகி ... திருமால் என்னும் காப்பவன் ஆகி
அரனென வாகி ... சிவன் என்னும் அழிப்பவனாகி
அவர் மேலாய் ... அம்மூவருக்கும்மேலான பொருளாகி
இகரமும் ஆகி ... இங்குள்ள பொருட்கள் யாவுமாகி
எவைகளும்ஆகி ... எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி
இனிமையும் ஆகி ... இனிமை தரும் பொருளாகி
வருவோனே ... வருபவனே
இருனில மீதில் ... இந்த பெரிய பூமியில்
எளியனும் வாழ ... எளியவனாகிய இந்த அடியேனும் வாழ
எனதுமுன் ஓடி வரவேணும் ... எனதுமுன் ஓடி வரவேணும்
மகபதி ஆகி ... யாகங்களுக்குத் தலைவனாக
மருவும் வலாரி ... விளங்கும் இந்திரன் (வலாசுரப் பகைவன்)
மகிழ் களி கூரும் ... மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும்
வடிவோனே ... அழகிய வடிவம் கொண்டவனே
வனமுறை வேடன் ... காட்டில் வசித்த வேடன் (அந்திமான்*)
அருளிய பூஜை மகிழ் ... செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற
கதிர்காமம் உடையோனே ... கதிர்காமம் (உன் பதியாக) உடையவனே
ஜெககண ஜேகு தகுதிமி தோதி திமி ... (அதே ஒலி)
என ஆடு மயிலோனே ... என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே
திருமலிவான ... லக்ஷ்மிகரம் நிறைந்த
பழமுதிர்ச்சோலை மலை மிசை ... பழமுதிர்ச்சோலை மலையின்மீது
மேவு பெருமாளே. ... வீற்றிருக்கும் பெருமாளே.
திருப்புகழ் சுதா ரகுநாதனின் குரலில்





எம்பெருமான் முருகனின் ஆறுபடைவீடுகளில் ஐந்தாவதாக குறிக்கப்பட்டிருப்பது குன்றுதோறாடல். இது முருகன் குடிகொண்டிருக்கும் அனைத்து மலைத்தலங்களையும் குறிக்கும் எனினும் விசேடமாக திருத்தணிகையை குறிக்கும் என்பர். சென்னையில் இருந்து 85கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மலைகளில் சிறந்த திருத்தணி. தொண்டை நாட்டின் தலைநகரமாகிய காஞ்சிபுரத்திற்கு தெற்கே உள்ள இந்தத் தலத்திற்கு அருணகிரிநாதர் 63 பாடல்களை எழுதியிருக்கிறார்.

முருகன் சூரபத்மனை வதம் செய்த பிறகு வள்ளி எனும் திணைக்குறப்பெண்ணை மணந்து கோபம் தணிந்து இருந்த இடம் திருத்தணிகை ஆகும். இத்தலத்திற்கு 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகள் கட்டியம் கூறுகின்றன. வருடத்தின் நாட்களுக்கு ஒன்றாக 365 படிகளையும் ஒரு இலட்சம் ருத்தராட்சங்களால் ஆன
ருத்ராட்ச மண்டபத்திரை உற்சவர் சந்நிதியாகவும் கொண்ட இனிமையான கோவில். வஜ்ரவேலுடன் ஞானத்தை அருளும் கோலத்தில் உள்ள மூலவரின் நெஞ்சில் தாரகாசுரன் என்பான் ஏவிய சக்ராயுதம் பதிந்த தழும்பு இருக்கிறது என்று அறியக் கிடைக்கிறது. சுவாமிமலை போலவே இங்கும் ஐராவதம் எனும் யானையே முருகனின் வாகனமாகும். நான்கு பிராகாரங்கள் கொண்ட் இக்கோவிலில் மூலவரான ஸ்ரீ தணிகை நாதரது சந்நிதி சற்று பின்னேயும், வள்ளி-தெய்வானை தேவியரது சந்நிதிகள் முன்புறம் சற்றுத் தள்ளியும் அமைந்துதுள்ளதானது தமிழின் ஆயுத எழுத்து (ஃ) போல் காண்ப்படுகிறது.

ஆண்டுதோறும் பங்குனி மாதம் குறிப்பிட்ட 3 நாட்களில் சூரியனின் கிரணங்கள் முதல்
நாள் சுவாமியின் பாதங்களிலும், 2-ஆம் நாள் மார்பிலும், 3-ஆம் நாள் சிரசிலும் விழுவது இக்கோயிலின் அற்புதம். முருகப் பெருமானே உருவாகிய சரவண தீர்த்தம், ஸ்ரீமகாவிஷ்ணு உருவாக்கிய விஷ்ணு தீர்த்தம் , பிரம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் , நந்தி ஆறு மற்றும் இந்திர நீலச்சுனை எனபன இக்கோவிலின் தீர்த்தங்களாக விளங்குகின்றன. இந்திரன் அளித்த ஒரு பெரிய சந்தனக் கல்லில் அரைக்கப்படும் சந்தனமே சுவாமிக்கு சார்த்தப் படுகிறது. சர்வரோக நிவாரணியான இந்த பிரசாதத்தை கருதுவார்கள். நெடுங்காலமாக சந்தனம் அரைக்கப்பட்டு வந்தாலும் இந்த சந்தனக் கல் சிறிதும் தேய்மானம் அடையாமல் உள்ளது என்று குறிப்புகள் காணப்படுகின்றன.

நினைத்த மாத்திரத்திலேயே நோய்நொடிகளை போக்கக்கூடிய திருத்தணிகை மலைக்குச் செல்லக்கூடிய வசதியையை வெகுசீக்கிரமாக எம்பெருமான் அருளட்டும்!

இனி இத்தலதிற்கான திருப்புகழ்
(நன்றி : http://thiruppugazhamirutham.blogspot.ca)

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் பெருமாளே.

பதம் பிரிக்க இப்படிவரும்
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும் சினமாக
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்
நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும்
நிசி கரு அறுக்கும் பிறவாமல்
நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும்
நிறை புகழ் உரைக்கும் செயல் தாராய்
தனத்தன.......தன பேரி
தடுட்டுடு............துடி முழக்கும்
தளத்துடன் நடக்கும் கொடு சூரர்
சினத்தையும் உடல் சங்கரித்து அ மலை முற்றும்
சிரித்து எரி கொளுத்தும் கதிர் வேலா
தினை கிரி குற பெண் தனத்தினில் சுகித்து எண்
திருத்தணி இருக்கும் பெருமாளே.

பத உரை
சினத்தவர் முடிக்கும் = கோபம் கொண்டவர்களின் தலைக்கும்
பகைத்தவர் குடிக்கும் = பகைமை பூண்வர் களுடையகுடிக்கும்.
செகுத்தவர் உயிர்க்கும் = கொல்லுபவர்களுடைய உயிருக்கும்.
சினமாக = கோபத்துடன் (நோக்கி).
சிரிப்பவர் தமக்கும் = சிரிப்பவருக்கும் பழிப்பவர் தமக்கும் = பழிப்பவர்களுக்கும்
திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் = திருப்புகழ் நெருப்புப் போன்றது என்னும் உண்மையை நாம் அறிவோம்.
நினைத்ததும் அளிக்கும் = அடியார்கள் நினைத்ததை எல்லாம் தரும்.
மனத்தையும் உருக்கும் = மனத்தையும் உருக்கும்.
நிசிக் கரு பிறவாமல் அறுக்கும் = இருண்ட கருவை பிறவாவண்ணம் அறுக்கும். (மீண்டும் மீண்டும் கருவில் சேருவதை தடுக்கும்)
நெருப்பையும் எரிக்கும் = நெருப்பையும் எரித்து அழிக்கும்
பொருப் பையும் இடிக்கும் = மலையையும் பொடி படுத்தும்
நிறைப் புகழ் = உனது நிறை புகழை
உரைக்கும் = ஓதும் செயல் = திருப்பணியை தாராய் = எனக்குப் பணித்து அருள்க.
தனத்தன.....தன பேரி = இவ்வாறு பேரிப் பறையும்
தடுட்டுடு.....துடி முழக்கும் = என்று உடுக்கைப் பறையும் முழக்கத்துடன்
தளத்துடன் நடக்கும் = படையுடன் வந்த.
கொடு சூரர் = கொடிய அசுரர்களின்.
சினத்தையும் = கோபத்தையும் (அழித்து)
உடல் சங்கரித்து = உடலை அழித்து
அம் மலை முற்றும் = (அவ்வாறு கிடந்த பிணங்களின்) மலை முழுமையையும்
சிரித்து = (தனது) சிரிப்பினால்
எரி கொளுத்தும் = எரித்துக் கொளுத்திச் சாம்பலாக்கிய
கதிர் வேலா = ஒளி வீசும் வேலனே.
தினைக் கிரி = தினை விளையும் மலையில் (வள்ளி மலையில்).
குறப்பெண் = (வாழும்) குறப் பெண்ணாகிய வள்ளி
தனத்தினில் = கொங்கையில் சுகித்து = இன்பம் பூண்டு
எண் = யாவரும் மதிக்கத் தக்க
திருத்தணி இருக்கும் பெருமாளே = திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.


2017-10-2

மூன்று உலகங்களுக்கும் இறைவனான எம்பெருமான் ஈசனுக்கே பிரணவத் தத்துவதின் பொருள் உரைக்கவென குழந்தை முருகன் அமர்ந்த இடமே சுவாமி மலையாகும். ஆறு படை வீடுகளில் நான்காவதாக திகளும் சுவாமிமலை செயற்கையாக அமைக்கப்பட்ட சிறு தளதின் மீது அமைந்திருக்கின்றது, தமிழில் உள்ள அறுபது வருடங்களை குறிக்கும் அறுபது படிகளில் ஏறியே தகப்பன் சுவாமி எனபடும் சுவாமிநாதனை தரிசிக்க முடியும்.

இலக்கியங்களில் திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமி மலையானது தஞ்சாவுரிலிருந்து 32 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில், சுவாமிமலை கோயிலைக் கொண்டிருப்பது, இந்தத் தலத்தின் தனிச் சிறப்பாகும். கம்பீரமாக நான்கரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தரும் சுவாமிநாதன் பாவவினைகளைப் போக்க வல்லவன். மூன்று பிராகாரங்களைக் கொண்டுள்ளது கோயில். கட்டுமலையின் அடிவாரத்தில் உள்ள 3-ஆம் பிராகாரத்தை வலம் வந்து 28 படிகள் ஏறிச் சென்றால் 2-ஆம் பிராகாரத்தை அடையலாம். அங்கிருந்து 32 படிகள் ஏறிச் சென்று கருவறையைச் சுற்றியுள்ள முதல் பிராகாரத்தை அடையலாம். சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட முன்பு அருகாமையில் உள்ள திருவலஞ்சுழி பிள்ளையாரை வழிபட்ட வேண்டும் என்பது மரபு.

கிணறாகக் காணப்படும் வஜ்ர தீர்த்தம், காவிரியின் கிளையான குமாரதாரை ,
வடகிழக்கில் உள்ள சரவண தீர்த்தம் மற்றும் நேத்திர தீர்த்தம் எனும் நோய் தீர்க்கும் தீர்த்தங்களை கொண்டிருக்கும் இக்கோவிலில் நெல்லி மரம் தல விருட்சமாக அமைந்திருக்கிறது. வருடம்தோறும் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் (ஜனவரி 1) திருப்படி திருவிழா நடைபெறுவது இவ்வாலய சிறப்பாகும்.








இனி இத்தலத்திற்கான திருப்புகழ்:
நிறைமதி முகமெனு மொளியாலே
நெறிவிழி கணையெனு நிகராலே
உறவுகொள் மடவர்க ளுறவாமோ
உனதிரு வடியினி யருள்வாயே
மறைபயி லரிதிரு மருகோனே
மருவல ரசுரர்கள் குலகாலா
குறமகள் தனைமண மருள்வோனே
குருமலை மருவிய பெருமாளே

பதம் பிரிக்க இப்படி வரும்:
நிறை மதி முகம் எனும் ஒளியாலே
நெறி விழி கணை எனு(ம்) நிகராலே
உறவு கொள் மடவர்கள் உறவு ஆமோ
உன திருவடி இனி அருள்வாயே
மறை பயில் அரி திரு மருகோனே
மருவலர் அசுரர்கள் குலகாலா
குற மகள் தனை மணம் அருள்வோனே
குருமலை மருவிய பெருமாளே.

விளக்கம்:
நிறை மதி = பூரண சந்திரன் போன்ற.
முகம் எனும் ஒளியாலே = முகத்தின் ஒளியாலும் நெறி
விழி = வழி காட்டியாயுள்ள. கணை எனும்
நிகராலே = கண்ணாகிய அம்பு செய்யும் போரினாலும்.
உறவு கொள் = (என்னிடம்) உறவு பூண்கின்ற.
மடவார்கள் = விலை மாதர்களின் உறவு
ஆமோ = தொடர்பு நல்லதாகுமோ?
உன = உன்னுடைய
திருவடி = திருவடிகளை
இனி அருள்வாயே = இனி எனக்குத் தந்தருளுக.
மறை பயில் அரி = வேதங்களில் சொல்லப்படும் திருமாலின்.
திரு மருகோனே = அழகிய மருகனே
மருவலர் = பகைவர்களாகிய.
அசுரர்கள் குல காலா = அசுரர்களின் குலத்துக்குக் காலனே
குறமகள் தனை = குறப் பெண்ணாகிய வள்ளியை
மணம் அருள்வோனே = திருமணம் செய்து அருளியவனே
குருமலை = குருமலை என்று சொல்லப்படும் சுவாமி மலையில்.
மருவிய பெருமாளே = வீற்றிருக்கும் பெருமாளே.

பாடல் சுட்டி

2017 - 10- 24


சிவனிடம் இருந்து பழம் பெறுவதற்காக உலகை சுற்றி வந்து சிவனுடன் கொபம் கொண்டு அமர்ந்த மலை பழனி என்ற மூன்றாவது படை வீடு என்று சிறுவயதில் படித்திருந்தாலும், மூன்றாவது படைவீடாக சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டது பழநியின் அடிவாரத்தில் இருக்கும் திருவாவினன் குடியையே ஆகும். இந்த திருத்தலத்தை திரு-என்ற இலக்குமி தேவியும், ஆ-என்ற காமதேனுவும், இனன்-என்ற சூரியனும் குடியிருந்து முருகப்பெருமானை வழிபட்டமையால் “திரு ஆ இனன் குடி” என்று பெயர் பெற்றது என்பார்கள். எது எப்படி ஆயினும் பழனி மலை மலைகளில் சிறந்தது என்பதற்கும் ஆண்டி கோலத்தில் தண்டோடு இருக்கும் தண்டாயுதபாணி தெய்வம் நாடி வந்தவர் நோய்களை தீர்க்கும் அருமருந்து எனபதிலும் ஐயமில்லை.

மதுரை விமான நிலைத்தில் இருந்து இரண்டு மணி நேரத்திலும் சென்னையில் இருந்து 5 மணி நேர மகிழூர்ந்து பயணத்திலும் பழனியை அடைந்துவிடலாம். கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் அழகாக காட்சி தருகிறது பழனிமலை. மலை
ஏறும் முன் திருவாவாவினன்குடியில் வள்ளி தெய்வயானையுடன் காட்சி தரும் முருகப் பெருமானையும் இம்மலையை கொண்டு வந்து இங்கு வைத்தவாரக கருதப்படும் இடும்பனையும் தரிசித்து 690 படிகள் ஏறினால் கருணக்கடலான எம்பெருமான் தண்டாயுதபாணி தெய்வமா காட்சி தருகிறார். சுற்றுலா பயணிகள், மலைக்கோயிலை சுற்றிப் பார்க்க ரோப்கார் (கம்பிவட ஊர்தி) வசதிகளும் உள்ளன.

2000 வருடங்களின் முன் வாழ்ந்த நந்தியெம்பெருமானின் சீட பரம்பரையில் வந்த போகர் என்பார் ஒம்பது விதமான நோய் தீர்க்கும் நச்சு பொருட்களையும் 4000 மேற்பட்ட மூலிகைகளைகளையும் கொண்டு 81 சித்தர்கள் உதவியோடு தயாரித்து நாடி வந்தவர் நோய்களை தீர்க்கும் முருகன் சிலையை வடிவமைத்து தந்திருக்கிறார். பழந்தமிழரான போகரின் மருத்துவ அறிவால் அமைக்கப்பட்ட முருகனின் நவபாஸாண சிலையில்
சாத்தி எடுகப்படும் சந்தனம் இன்று வரைக்கும் பலவித நோய்களை தீர்க்கின்றது. நவபாஷண சிலையை ஆராட்சி செயத விஞ்ஞானிகள் இச்சிலையின் மகத்துவம் குறித்து வியந்திருக்கிறார்கள் (சுட்டி கீழே).

தண்டாயுதபாணி விக்ரகம் சூடாக இருப்பதால் இரவு முழுவதும் விக்கிரகத்திலிருந்து நோய்களை நிவர்த்தி செய்யும் நீர் வெளிப்படும் என்றும் அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் பரவி நிற்கும் என்றும் அறியகிடைக்கிறது. விக்ரகம் மீது சந்தனத்தை அரைத்து பசைப் போல பூசி வைத்த பின் மறுநாள் எடுத்தால் அது மருத்துவச் சிறப்பு மிக்கதாகிறது என பக்தர்கள் நம்புகின்றனர். இந்தக் கோயிலில் வழங்கப்படும் பழனி பஞ்சாமிர்தமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இனி இத்தலத்திற்கான திருப்புகழ்:
(நன்றி : http://thiruppugazhamirutham.blogspot.ca)

அபகார நிந்தைபைட் டுழலாதே
அறியாத வஞ்சரைக் குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
உனைநானி னைந்தருட் பெறுவேனோ
இபமாமு கன்தனக் கிளையோனே
இமவான்ம டந்தையுத் தமிபாலா
ஜெபமாலை தந்தசற் குருநாதா
திருவாவி னன்குடிப் பெருமாளே.

பதம் பிரிக்க இப்படி வரும்:
அபகார நிந்தை பட்டு உழலாதே
அறியாத வஞ்சரை குறியாதே
உபதேச மந்திர பொருளாலே
உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ
இபமா முகன் தனக்கு இளயோனே
இமவான் மடந்தை உத்தமி பாலா
ஜெமாலை தந்த சற் குரு நாதா
திருவாவினன் குடி பெருமாளே.

பொருள்
அபகார நிந்தை பட்டு = தீமை செய்ததினால் நிந்தனைகளுக்கு ஆளாகி.
உழலாதே = அலையாமலும்
அறியாத = (நன்னெறியை) கைக்கொள்ளாத.
வஞ்சகரை = கயவர்களுடன்
குறியாதே = இணங்குவதைக் கருதாமலும்.
உபதேசப் பொருளாலே = உபதேச மந்திரப் பொருளையே துணையாகக் கொண்டு
உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ = உன்னை நான் நினைந்து உன் திரு வருளைப் பெற மாட்டேனோ.
இபமா முகன் தனக்கு = யானை முகம் உடைய விநாயகருக்கு
இளையோனே = தம்பியே
இமவான் மடந்தை = இமய ராசன் மகளாகிய பார்வதி என்னும்
உத்தமி பாலா = உத்தமியின் பிள்ளையே.
ஜெபமாலை தந்த சற் குரு நாதா = ஜெபமாலை ஒன்றை எனக்குத் தந்த சற்குரு நாதனே
திருவாவினன்குடிப் பெருமாளே = திருவா வினன் குடியில் வீற்றிருக்கும் பெருமாளே.

பாடல் சுட்டி:

பழனி ஆண்டவர் சிலை விஞ்ஞான சோதனை:
http://murugan.org/tamil/saravanan.htm

(2017-10-23)



முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்தில் அழகான கடற்கரைப் பகுதியில் அமைந்த திருத்தலமாகும். மதுரை விமான நிலையத்தில் இருந்து 200KM தொலைவிலும் சென்னையில் இருந்து 600KM தொலைவிலும் அமைந்துள்ளது. மதுரையில் இருக்கும் சுற்றுலா ஏற்பாட்டாளர்களின் சிற்றூர்ந்திலோ அல்லது சென்னையில் இருந்து புகையிரதம் மூலமோ திருச்செந்தூர் வரமுடியும்

தேவசேனைக்கு தலமை தாங்கி முருகன் சூரனை வெற்றிகொண்ட தலம் இதுவாகும். சூரனை வெற்றிகொண்ட முருகன் சிவனை பஞ்ச லிங்கங்களாக பிரதிஸ்டை செய்து வழிபட குரு பகவானின் ஆலோசனைப் படி தேவலோகத்தின் விஸ்வகர்மாவை கொண்டு இக் கோவிலை அமைப்பித்ததாக வரலாறு கூறுகிறது. எது எப்படி ஆயினும் கடற்கரையில் 150 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்துடன் கூடிய இக்கோவிலை அமைத்தமையை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. முருகப் பெருமான் தவக்கோலத்தில் கையில் தாமரை மலருடன் மூல மூர்த்தியாகவும் ஷண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய்ப் பெருமாள் என்று 4 உற்சவர்களாகவும் தனி தனி சன்னதிகளிலும் இருந்து அருள் பாலிக்கிறார். மூலவருக்கு பின்புறம் பஞ்ச லிங்ககளும் காணப்படுகின்றன.

முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது.முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். கந்தசஸ்டி காலத்தில் மிக விசேடமாக பூஜைகள் நடைபெற்று சூர சம்காரம் நடைபெறும். அதன் பின்னர் சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்பட்டு, கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வது இத்தலதின் சிறப்பாகும்.

தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது. தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் இக்கோவில் குறித்த தகவல்கள் இருப்பதால் இத்தலம் 2000 வருடங்களுக்கு முற்பட்டது என்பது ஐதீகம். கி.பி. 1648 பகுதியில் போத்துக்கீசர்கள் இக்கோவிலின் எழில்மிகுச் சிற்பங்களை உடைத்து எம் பெருமானின் ஐம்பொன் சிலைகளையும் பெருமளவு நகைகளையும் களவாடி இலங்கை நோக்கி கொண்டு சென்ற வேளையில் பெரும் புயல் தாக்கியதாவும் அவர்கள் சிலைகளை கடலில் விட்டதாகவும் தென்பகுதிக்கு திருமலையின் வரிவசூல் செய்யும் அலுவலராகப் பணியாற்றிய வடமலையப்பப்பிள்ளையின் கனவில் முருகன் வந்து அவரை சிலைகளை கடலில் இருந்து மீட்க பணித்ததாகவும் அறியக் கிடைக்கிறது. (சுட்டி கீழே). இலங்கை மன்னன் கண்டி அரசன் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி, சந்தன மரம் ஒன்றை வெட்டிக் கடலில் மிதக்க விடச் சொன்னதாவும் மன்னன் வெட்டித் தள்ளிய மரம் திருச்செந்தூர்க் கரையை அடைந்ததாவும் இன்றும் இந்த மரமே கொடிமரமாக உள்ளதாவும் திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் நூல் வாயிலாக அறிய முடிகிறது.

இனி இத் தலதிற்கான திருப்புகழ்: 
(நன்றி : http://thiruppugazhamirutham.blogspot.ca)

இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித் துழலாதே
உயர்கருணை புரியு மின்பக் கடல்மூழ்கி
உனையெனது ளறியு மன்பைத் தருவாயே
மயில் தகர்க லிடைய ரந்தத் தினைகாவல்
வனசகுற மகளை வந்தித் தணைவோனே
கயிலை மலை யனைய செந்திற் பதிவாழ்வே
கரிமுகவ னிளைய கந்தப் பெருமாளே.

பதம் பிரிக்க இப்படி வரும்:
இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி
இரவு பகல் மனது சிந்தித்து உழலாதே
உயர் கருணை புரியும் இன்ப கடல் மூழ்கி
உனை எனது உளம் அறியும் அன்பை தருவாயே
மயில் தகர் கல் இடையர் அந்த தினை காவல்
வனச குற மகளை வந்தித்து அணைவோனே
கயிலை மலை அனைய செந்தில் பதி வாழ்வே
கரி முகவன் இளைய கந்த பெருமாளே.

பத உரை
இயல் இசையில் = இயற்றமிழுடன் கூடிய இசை ஞானத்தில். உசித = தகுதி கொண்ட. வஞ்சிக்கு = மாதர்களுக்கு. அயர்வாகி = தளர்வு அடைந்து. இரவு பகல் = இரவும் பகலும். மனம் சிந்தித்து = அவர்களையே நினைத்து. உழலாதே = நான் அலையாமல்.
உயர் கருணை புரியும் = (உனது) உயர்ந்த கருணையால் வரும். இன்பக் கடல் மூழ்கி = இன்பக் கடலில் முழுகி. உனை = உன்னை. எனது உள = என்னுடைய மனத்தில். அறியும் = தெரிந்து கொள்ளும். அன்பைத் தருவாயே = அன்பைத் தந்து அருள்வாயாக.
மயில் தகர் கல் இடையர் = மயிலும், ஆடும் நிறைந்திருக்கும் மலையில் வசிக்கும் வேடுவர்களுடைய. அந்தத் தினை காவல் = அந்தத் தினைப் புனத்தில் காவல் பூண்டிருந்த. வனச = இலக்குமி போன்ற. குற மகளை = குறப் பெண்ணாகிய வள்ளியை. வந்தித்து = வணங்கி. அணைவோனே = அணைந்தவனே.
கயிலை மலை அனைய = திருக்கயிலை மலை போலப் (புனிதமான). செந்திற் பதி வாழ்வே = திருச்செந்தூரில் வாழ்பவனே. கரி முகவன் = யானை முக கணபதிக்கு. இளைய கந்தப் பெருமாளே = கணபதியாருக்குத் தம்பியாகிய பெருமாளே.



சுட்டிகள்:
திருச்செந்தூர் பற்றி 50 விடையங்கள் :
http://www.vikatan.com/…/spec…/vaikasi-visakam/article6.html

திருச்செந்தூர் தல வரலாறு
http://chendhurmurugan.blogspot.ca/p/blog-page_779.html

(2017 -10- 22)

 கந்தசஸ்டி காலம்  ஆதலால் முருகப் பெருமானின் சிந்தனை மனத்தை நிரப்பி உள்ளது. நண்பர் கானா பிரபா தான் தரிசித்த முருகன் கோவில்களை ஆறு நாளும் எழுதுகிறார். அவரது கட்டுரைகளே ஆறு நாட்களில் ஆறுபடை வீடுகளை பற்றி எழுதும் இம் முயற்சிக்கு  தூண்டுகோலாக அமைந்த்து.



இன்று முதலாம் நாளில் திருப்பரங்குன்றம் பற்றி பார்ப்போம். நான் இந்தவருடம்  27 வருடங்களின் பின் தமிழ்நாடு சென்றபோது சென்ற முதலாவது தலமும் இதுவேயாகும். மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியே கிடத்தட்ட 35 நிமிட தூரத்திலேயே அழகாக அமைந்திருக்கிறது இவ் ஆலயம். குழு குழு காரில் மதுரையின் பச்சையை அனுபவித்து மண்மணத்தை நுகரும் முன்னே கோவிலுக்கு வந்துவிடுகிறோம். வார நடுப்பகுதி என்பதால் ஆள் நெரிசல் இல்லாமல் வரிசை இல்லாமல் உடனேயே தரிசனம் கிட்டியது. மதுரையிலிருந்து இத்திருத்தலத்திற்கு பேருந்துகள் மூலமாகவும் போகலாம்.



தனிப்பெருங் கருணைக் கடலான முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதலாவது திருப்பரங்குன்றமாகும். முருகன் தெய்வயானையை திருமணம் புரிந்து ’குஞ்சரி மணாளன்’ ஆகியது இத்தலத்திலேயாம். மிக அழகான குடவரை கோவில். மலையைக் குடைந்து கோவிலாக ஆக்கிவைத்திருக்கிறார்கள் எமது முன்னோர்கள். கோவில் மூலஸ்தானத்தில் முருகன் அமர்ந்தபடி தெய்வயானையுடன் மணமுடிக்கும் கோலத்தை காண இரண்டு கண்களும் கண்ணாடியும் போதவில்லை.  முருகனுக்கு அருகிலேயே நாரதருடன் தன் மகளை தாரைவார்க்க இந்திரனும், விவாக காரியங்கள் நிகழ்த்த பிரம்மாவும் மற்றும் சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரோடு சூரிய சந்திரர்களும் திருமணத்தை காண கூடியுள்ளனர். தெய்வயானை திருமணத்தின்பின்னரெயே வள்ளி திருமணம் நடந்ததால் முருகனுக்கு பக்கத்தில் வள்ளியை காணாமுடியாது என்ற தகவலை அர்ச்சகர் கூறினார்.

இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பெருமாள், விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் காணப்படுகின்றமை அரியதோர் காட்சியாகும். ஆதி சொக்கநாதப் பெருமானே மூல மூர்த்தி என்பதும் குடவரை கோவில் என்பதால் பிரகாரம் கிடையாது என்பதும் உபரித்தகவல்கள். இக்குன்றம் லிங்க வடிவில் காட்சியளிப்பதால் மலையையே சிவனாக வழிபடுகின்றனர்.

ஆரம்ப காலத்தில், தென்பரங்குன்றம் எனும் குடவரைக் கோயிலே பிரதானமாக இருந்ததாகவும், இக்கோயில் சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்கு திசை நோக்கி திருப்பி அமைத்திருப்பதாகவும் ஆதலால் "திருப்பிய பரங்குன்றம்" என்றழைக்கப்பட்ட இவ்வூர் "திருப்பரங்குன்றம்" என்று மருவியராகவும் திரு P. காளீஸ்வரன்  என்பார் குறிப்பிட்டிருக்கிறார் (சுட்டி கிழே). இலக்கியங்களில் தண்பரங்குன்று, திருப்பரங்கிரி, பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என அழைக்கப்பட்டதும் இத் தலமேயாம்.

புத்தகங்களில் மட்டுமே படித்து வியந்த இத்தலத்தை கண்டு இரசித்து வாழ்நாளில் கிடைத்த வரம்! அடுத்தமுறை போகக்கிடைத்தால் கிரிவலம் வரவேண்டும். தீர்த்தங்களையும் காணவேண்டும்

இத் திருதலத்திகான திருப்புகழ்
(நன்றி : http://thiruppugazhamirutham.blogspot.ca)

சந்ததம் பந்தத் தொடராலே
     சஞ்சலந் துஞ்சித் திரியாதே

கந்தனென் றென்றுற் றுனைநாளும்
     கண்டுகொண் டன்புற் றிடுவேனோ

தந்தியின் கொம்பைப் புணர்வோனே
     சங்கரன் பங்கிற் சிவைபாலா

செந்திலங் கண்டிக் கதிர்வேலா
     தென்பரங் குன்றிற் பெருமாளே.

பதம் பிரிக்க பின்வருமாறு அமையும்

சந்ததம் பந்த தொடராலே
சஞ்சலம் துஞ்சி திரியாதே

கந்தன் என்று என்று உற்று உனை நாளும்
கண்டு கொண்டு அன்பு உற்றிடுவேனோ

தந்தியின் கொம்பை புணர்வோனே
சங்கரன் பங்கில் சிவை பாலா

செந்தில் அம் கண்டி கதிர் வேலா
தென் பரங்குன்றில் பெருமாளே.

கருத்து:
சந்ததம் பந்தத் தொடராலே ... எப்பொழுதும் பாசம் என்ற தொடர்பினாலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே ... துயரத்தால் சோர்ந்து திரியாமல்,
கந்தனென்று என்று உற்று உனைநாளும் ... கந்தன் என அடிக்கடி மனதார உன்னை தினமும்
கண்டுகொண்டு ... உள்ளக் கண்களால் கண்டு தரிசித்து,
அன்புற்றிடுவேனோ ... யான்அன்பு கொள்வேனோ?
தந்தியின் கொம்பை ... (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த கொடி போன்ற தேவயானையை
புணர்வோனே ... மணம் செய்துகொண்டு சேர்பவனே,
சங்கரன் பங்கிற் சிவைபாலா ... சங்கரனின் பக்கத்தில் தங்கிய பார்வதியின் குழந்தாய்,
செந்திலங் கண்டிக் கதிர்வேலா ... திருச்செந்தூரிலும், அழகிய கண்டியிலும் ஒளிவீசும் வேலோடு விளங்குபவனே,
தென்பரங் குன்றிற் பெருமாளே. ... அழகிய திருப்பரங்குன்றில்அமர்ந்த பெருமாளே.




ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமான் திரு P. காளீஸ்வரன் : http://www.kaumaram.com/articles/aarupadaiveedu_u.html