தலைவர் இருக்கிறாரா இல்லையா?
ஒருநாள் வருவாரா இல்லையா?
தமிழ் ஈழம் சாத்தியமா இல்லையா?
போராட்டம் அழிய என்னகாரணம்?

ஆராச்சி செய்பவர்களே!
எங்களுக்கு இதைவிட
மிகவும் முக்கியமான
பணி உள்ளது உறவுகளே!

புலத்தில் வாழும் எமது
அடுத்த தலைமுறையை பாருங்கள்
அவர்கள் கதைக்கும் மொழிகள் எத்தனை?
அவர்கள் பழகும் நட்புக்கள் எத்தனை நாட்டவர்?
அவர்கள் படித்த பாடங்கள் எத்தனை?
அவர்கள் இல்லாத துறைகள் எது?

ஆயுதங்களை விடவும் பலமான
ஆயிரம் வழிகள் உண்டு
இளைய தலைமுறைக்கு
நாட்டை மீட்கும் பொறுப்பும் உண்டு

ஊடகத்துறை பற்றி நன்கு அறிந்தோற்கு
உணவு மட்டும் ஊட்டாமல் - விடுதலை
உணர்ச்சியையும் ஊட்டுவோம்
பலதைப் பற்றியும் வாதிடுவோர்க்கு
சுதந்திரம் பற்றியும் போதிப்போம்

அவர்களின் அப்பு ஆச்சியும்
பாட்டனும் பூட்டனும்
பூட்டனின் பூட்டனும்
கமம் செய்து வாழ்ந்த மண்

அவர்கள் பரம்பரை ஆண்ட மண்
அண்ணன் அக்காக்கள் பலர்
உயிர் கொடுத்து காத்தமண்  - அது
அவர்களின் உருத்து மண் என்றும்

அங்கு வாழும் உறவுகள்
அவர்களின் வேர்கள் என்றும்
அங்கிருக்கும் அடர்ந்த மரங்கள்
அவர்களின் பாட்டன் பாட்டி
கை பட்டவை என்றும்
தெரியப்படுத்துங்கள்
புரியப்படுத்துங்கள்

அன்பான உறவுகளே!
தமிழர் தாயகம் அது என்றும்
எதிரி ஆக்கிரமித்த பகுதி எது என்றும்
எங்கள் வரலாறு தொன்மையானதென்றும்
எங்கள் பண்பாடு பெருமையானதென்றும்
நீங்கள் தேடி அறிந்துகொள்ளுங்கள்
பின்னர்
பின்வந்தோர்க்கு கற்றுக்கொடுங்கள்

படங்களும் உண்மையில்லை – நெடுமையான
நாடகங்களும் உண்மையில்லை
நாங்கள் நாடு இழந்தது நிதர்சனம் - அதை
வீட்டு பாடமாய் புகட்டி வாருங்கள்

நேரமில்லை நட்புக்களே!
தமிழன் தாயகத்தில் பிறக்கும்
ஆக்கிரமிப்பாளன் பிள்ளை நாளை
தானே இன் நிலத்தின் மகன் என்பான்
புலத்தில வாழும்
உங்கள் பிள்ளையை எவன் என்பான்!

நாளைய சந்ததிக்கு 
உணர்வை ஊட்டுங்கள்
தர்மம் எதுவென்று
தாராளமாய் போதியுங்கள்
அவர்களில் இருந்து வருவான்
நாளைய தலைவன்

ஒருவரல்ல
ஒராயிரமாய்.
ஒவ்வொருவரில் இருந்தும்
ஒராயிரமாய்
வருவான் தலைவன்




ஆசிரியர் கலாசாலையிலே தான் பயின்று பல
ஆசான்களை உருவாக்கியவர் எம் தந்தை.
தாய்மொழியாம் தமிழதனை பலபேர்க்கு
தடையின்றி கற்பித்த கல்விக்கடல்.

நிமிர்த்து அவர் நடை, நேரியது அவர் பார்வை
சரியானதை சரியென்று வாதிடும் அவரது நா.
குறுகியது அவர் தோற்றம், மகா மேரு
மலையிலும் பெரியது அவரது மனம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழவேடுமென
மற்றோற்கு உதாரணமாய் வாழ்ந்தவர் அவர்
மேன்மக்கள் படங்கள் தனை தேடித்தேடி
வீட்டுக்கூடத்தில் அலங்கரித்தவர் அவர்

அவர் சித்திரம் தீட்டிய வெற்றுத்தாள் கதை சொல்லிற்று
அவர் அணிந்ததனால் வெள்ளைவேட்டி கர்வப்பட்டது
அவர் பாடம் கேட்டவர் அறிஞர்கள் ஆனார்கள்
அவர் சொற்கேட்டோர் உத்தமர் ஆகினர்

அவர் எங்களுக்கு புகட்டிய இதிகாசங்களுக்கு அளவில்லை
அவர் காட்டிய பாசம் இலக்கியத்தில் இடம்பெறவில்லை
அவர் வேண்டிவைக்காத நல்ல தமிழ் புத்தகம் இல்லை
அவரை கொண்டாடத குரும்பசிட்டி உறவுகளும் இல்லை

எமக்கு தந்தை, என் தாய்க்குப் பதி
அவர் தம்பிதங்கைக்கு நல் அண்ணன்
ஊரோர்ருக்கு ஆசிரியர்
த க செல்லையா எனும் நாமங்கொண்ட
ஒர் நல்ல மனிதர்.