ஆசிரியரைப்பற்றி:
ஆவண ஞானி இரா கனகத்தினம் அவர்கள் ஈழத்தில் குருமபசிட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். 1956ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை கிட்டத்தட்ட 56 வருடங்களாக இலங்கைத்தமிழர் வரலாற்றை ஆவண வடிவமாகத் தொகுத்து வருவதை முழு நேர சேவையாக செய்துவருகிறார். 1890 முதல் 2011 வரையான 121 வருட வரலாற்று, அரசியல், கலாச்சார செய்திக் குறிப்புகள், நாழிதள்கள், படங்களை தனது வாழ்க்கையே அர்ப்பணித்து திரட்டியவர்.
தான் பிறந்த குரும்பசிட்டியிலும் பின்பு கண்டியிலும் ஆவணக்காப்பகத்தை நிறுவி தனிமனிதனாய் 2000 ஆண்டுவரை திரட்டிய இரா கனகரத்தினம் அவர்கள் இலங்கை இராணுவத்தின் கெடுபிடிகளால் கிளிநொச்சிக்கு காப்பகத்தை கொண்டு செல்லவேண்டியிருந்தது. அங்கு தமிழர் வரலாற்று வடிவங்களை திட்டமிட்டே அழித்து வரும் சிஙகளர்களால் ஒரு நூற்றாண்டு கால ஆவணங்களும் தீக்கிரையானது. இதற்கு சில வருடங்களின் முன்பு 75 வீதமான் ஆவணங்கள் நுண்படச் சுருள்களாக ஆக்கப்ப்ட்டு அன்னிய தேசம் ஒன்றில் பாதுகாகப்படுவது மனதிற்கு ஆறுதல் அழிக்கிறது.
தமிழர் வாழும் தேசங்களில் எல்லாம் பண்பாடும் மொழியும் காப்பாற்றப் பட வேண்டும் என்ற உத்வேகத்துடன் உலகத்தமிழர் பண்பாட்டு கழகம் என்ற அமைப்பை 1974 ம் ஆண்டு வேறு சில அறிஞர்களோடு பல கெடுபிடிகளுக்கு மத்தியில் தாபித்தவர் திரு கனகரத்தினம் என்றால் மிகையாகாது. தமிழர் வாழும் தேசங்கள் என்றால் இந்தியா, இலங்கை, சிஙகப்பூர், மலேசியா என்று வரலாற்றாசிரியர்கள் கற்பித்துவந்த காலத்தில் அலைகடல்களுக்கு அப்பால் தமிழர் என்ற நூலினூடு இந்தொனேசியா முதல் கரிபியன் தீவுகள் வரை பரந்துவாழும் எமது உறவுகள் பற்றிய தகல்வகளை தந்தவர் இரா கனகரத்தினம் அவர்கள்.
தந்தை சொல்வநாயம் பற்றிய ஒரு புத்தகம், சீசரின் தியாகம் (1952), அலைகடல்களுக்கு அப்பால் தமிழர்(1983), உலத்தமிழர் ஐக்கியத்தை நோக்கி(1974), மொறிசியசு தீவில் எங்கள் தமிழர்(1980), இறீயூனியன் தீவில் எங்கள் தமிழர்(1989) ஆகிய நூல்களை ஏற்கனவே எழுதி உள்ளார்.
இலை மறை காயாக வாழ்ந்து ஈழத் தமிழ் வரலாற்றை ஆவணப்படுதும் இப் பெரியாரை வாழும் காலத்திலேயே கௌரவிப்பது தமிழர்கள் அனைவரது கடமையாகும்.
நூல் 1 : ஒரு குடையின் கீழ் உலகத் தமிழினம்
உலகத் தமிழர்களை ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவரவேண்டும் என்ற ஆசிரியரின் கொள்கையில் இருந்து உருவான இன்னூல் அனைத்து தமிழர்களும் படிக்க வேண்டிய ஒன்று. உலகத் தமிழர் இயக்கம் ஆரம்பிக்க ஏதுவான காரணங்களையும் அதனை ஸ்தாபிக்க உதவியவர்கள் பற்றியும் எவ்வாற்றான கெடுபிடிகளுக்கு மத்தியில் அவ் அமைப்பு உருவாக்கப்பட்ட்து என்றும் விரிவாக தனது மனப்பதிவுகளை முதலாவது பகுதியில் ஆசிரியர் விபரித்திருக்கிறார்.
இரண்டாவது பகுதியில் உலகெங்கணும் பரந்துவாழும் தமிழர்களை - முக்கியாமாக 18ஆம் நூற்றாண்ட்டில் இடம் பெயந்தவர்கள் - பற்றிய செய்திகளை விபரமாக தொகுத்து வழங்கிகப்பட்டிருக்கிறது. அலை கடல்களுக்கு அப்பால் பல சிறிய தீவுகளில் ஆங்கிலேயர்களாலும் பிரான்சியர்களாலும் குடியேற்றப்பட்ட மக்களின் தகவல்கள் வியப்படையச் செய்வதோடு இன்று புலம் பெயந்த தமிழர்கள் தமிழ் மொழியை பண்பாட்டு விழுமியங்களை சந்ததிக்கு கொடுக்காமல் விட்டால் என்ன நடக்கும் என்பதையும் கடந்த கால வரலாறு ஐயமுற தெரிவிக்கிறது.
சிங்கப்பூர், மலேசியா, மியன்மார், அந்தமான் நிக்கொபார் தீவுகள், ரினிடாட், மார்த்தினிக், குவாட்லொப், சீசெல்ஸ், பிஜித்தீவுகள், தென் ஆபிரிக்கா, மொரிசியஸ், இறீயூனியன், இந்தொனீசியா வாழ் தமிழர்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ஆசிரியர் இன்னும் சில ஆய்வு செய்யப்படாத நாடுகளையும் பட்டியலிட்டிருக்கிறார்.
நூல் 2: ஒரு நூற்றாண்டு இலங்கைத்தமிழர் வரலாறு மைக்கிறோபிலிம்களில்
வரலாறு இன்றேல் தமிழர் வாழ்வே இல்லை என்ற ஆவணக்காப்பகத்தின் தாரக மந்திரத்தை புடம் போட்டுக்காட்டும் இக்கைநூல் தமிழர்கள் வரலாற்றை ஏன் ஆவணப்ப்டுத்தவேண்டும் என்ற கேள்விக்கு விடை காண்பதோடு ஆசிரியர் எப்படி ஆவண காப்பகத்தை உருவாக்கினார் என்ற வரலாற்றை விளக்குகிறது.
ஏலவே குறிப்பிட்ட்து போன்று ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட இலங்கைத்தமிழர் வரலாறு மைக்கிறோபிலிம்களில் தொகுக்கப்படுள்ளது. ஆவணங்களை தொகுக்க ஆசிரியருக்கு உறுதுணையாகி நின்றவர்களின் பெயர்களும் ஆவணங்கள் சேகரிக்கப்பட்ட தினசரி, வார ஏடுகளின் பட்டியலும் தரப்படுள்ளன.
இலங்கையில் தோன்றி மறைந்த பல்வேறு சஞ்சிகைகள், வாரப் பத்திரிகைகள், பழந்தமிழ் ஏடுகள், காட்டூன்கள் மற்றும் செய்திகளின் மூலங்கள் எல்லாம் ஆவணக்காப்பத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. தமிழர்களின் பல தலைமுறைகளுக்கு கிடைத்திருக்க வேண்டிய சொத்து ஒரு நாளில் தீயால் அழிக்கப்பட்டது.
நார்வே நாட்டின் பண உதவியுடன் 75 வீதமான ஆவணங்கள் நுண்பட சுருளாக்கப்பட்டன. இவற்றில் ஒரு தொகுதி சுவிஸ்லாந்து யுனஸ்கோ ஆவணக்காப்பகத்தில் எதிகால சந்ததியினரின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு பெரிய தொகுதி புகலிட நாட்டொன்றில் பாதுகாப்பாக உள்ளது. 25 வீதமான ஆவணங்கள் முற்றிலும் அழிந்து விட்டன. இந்த நுண்பட சுருள்களை பற்றி இக் கையேடு விளக்குகிறது.
இன்னூலை வாசித்த பிறகு இவ் ஆவணங்களை ஆசிரியரின் வாழ்நாளில் எல்லோருக்கும் பயன்படும்வகையில் வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட ஆவல்.